Last Updated : 08 Jul, 2022 05:30 PM

1  

Published : 08 Jul 2022 05:30 PM
Last Updated : 08 Jul 2022 05:30 PM

முதல் பார்வை | பன்னிக்குட்டி - ஒரு ‘டீசன்ட்’டான நகைச்சுவைப் படைப்பு!

பன்னிக்குட்டியை மையமாக வைத்து நிகழும் சம்பவங்களை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கும் படைப்பு இந்தப் படம்.

உத்ராவதிக்கு (கருணாகரன்) வாழ்க்கையில் எல்லாமே பிரச்சினைதான். தனது தங்கை நிலாவதி (ஷாதிகா) கணவருடன் சண்டையிட்டு தாய்வீட்டிலேயே தங்கிவிடுகிறார். அந்த சோகத்தில் அப்பா பெரிய கருப்பு (டிபி கஜேந்திரன்) எப்போதும் குடித்துக் குடித்து மதுவுக்கு அடிமையாகவிடுகிறார். தவிர, கருணாகரனுக்கு காதல் கைகூடவில்லை என்ற விரக்தி ஒருபுறம். பிரச்சினைகள் சூழ்ந்த இந்த வாழ்க்கையில் நம்பிக்கையிழந்து தற்கொலைக்கு முயல்கிறார்.

அதனைப் பார்த்த சிலர் அவரைக் காப்பாற்றி, பிரச்சினைகளுக்கு தீர்வு காண சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர். அந்த சாமியார் என்ன சொன்னார்? உத்ராவதி வாழ்வில் குடிகொண்டிருந்த பிரச்சினைகளெல்லாம் தீர்ந்ததா என்பதை ஒரு பன்னிக்குட்டியை மையமாக வைத்து ஜாலியான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அனுசரண் முருகையன்.

அவரது முதல் படமான 'கிருமி' விறுவிறுப்பான த்ரில்லர் கதையம்சம் கொண்ட படம். இப்போது அவரது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பன்னிக்குட்டி' அதற்கு அப்படியே நேர்மாறாக ஒரு ஜாலியான காமெடி டிராமா. 'கிருமி'யில் த்ரில்லரின் ஸ்கோர் செய்தது போலவே 'பன்னிக்குட்டி’யில் நகைச்சுவையில் பார்வையாளர்களை சிரிக்க வைத்திருக்கிறார் அனுசரண்.

உத்ராவதியாக கருணாகரன். கிராமத்து இளைஞனுக்கான எல்லா பொருத்தங்களுடன், கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்திப்போகிறார். அவரது அப்பாவியான முகம், அந்த கேரக்டருக்கான சோகத்தை கடத்திவிடுவது பெரும்பலம். திட்டாணியாக யோகிபாபு. குறைவான காட்சிகளில் குறிப்பிடத் தகுந்த நடிப்பை வெளிப்படுத்தி, சில டைமிங் காமெடிகளிலும் அசத்தியிருக்கிறார். புருனேவாக நடித்திருக்கும் ராமருக்கு இது முக்கியமான படம். ஐ.லியோனிக்கு முன்பாக அமர்ந்துகொண்டு அவர் நடித்திருக்கும் ஒரு காட்சி, படம் முடிந்த பின்பும் நினைவில் தேங்குகிறது.

நகைச்சுவை காட்சிகளில் படத்துக்கு பெரும் பலம் சேர்ந்திருக்கிறார் ராமர். அவருடன் தங்கதுரை காமெடிகள் சில இடங்களில் பூஸ்வானம் போலவும், சில இடங்களில் சரவெடியாகவும் சிரிக்க வைக்கின்றன. 1997-ம் ஆண்டு அருண்விஜய், வடிவேலு நடிப்பில் வெளியான 'கங்கா கௌரி' படத்தில் ஒரு அப்பா கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார் ஐ.லியோனி. அதையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் படத்திலும் முக பாவனைகளால் கவனிக்க வைக்கிறார். தவிர சிங்கம் புலி, டிபி கஜேந்திரன், மாலினி சாத்தப்பன், ஷாதிகா ஆகியோர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

படம் முழுக்கவே நிறைய காட்சிகள் வெடித்து சிரிக்க வைக்காவிட்டாலும், மென்மையான சிரிப்பை வரவழைக்கிறது. கருணாகரன், ராமர், தங்கதுரை மூன்று பேரும் சேர்ந்த ஃப்ரேம்கள் எதோ ஒருவகையில் ரசிக்க வைத்துவிடுகின்றன. அந்தக் கதாபாத்திரத் தேர்வும் கச்சிதம் பெறுகிறது. இடையிடையே வரும் காதல் காட்சிகள் பெரிய அளவில் தொந்தரவு செய்யவில்லை என்றாலும், அதே நம்பிக்கையில் கருணாகரன் - மாலினிக்காக காதல் பாடல் வரை சென்றது அதிருப்தி. தொடக்கத்தில் சுவாரஸ்யமில்லாமல் தொடங்கும் கதை, பிறகு சில திருப்பங்களை உள்வாக்கிகொண்டாலும், பெரிய அளவில் பலனளிக்கவில்லை.

ஜாலியாக கொண்டு சென்ற இந்தப் படத்தில் நாயகனுக்கு ஒரு பிரச்சினையோ, தேவையோ வரும்போது, அது நமக்கு எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. நாம் அதை எளிதில் கடந்துவிடுகின்றோம். அதனால், நாயகன் பன்னிக்குட்டியை தேடிச்செல்லும்போது, நமக்கு அந்தத் தேடல் ஒட்டவில்லை. இதனால் ஒரு வெறும் துண்டு துண்டான நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்கும் படமாக சுருங்கி, படத்தின் கதையோட்டம் நம்மை பெரிய அளவில் பாதிப்பதில்லை. அதேபோல படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் அழுத்தமாக எழுதப்படாததால், படம் முடிந்த பின்பும் ஒரு முழுமையற்ற உணர்வு தொக்கி நிற்பதை உணர முடிகிறது.

கிருஷ்ண குமார் இசையில், ப்ரணிதி குரலில் 'பன்னிக்குட்டி பன்னிக்குட்டி' பாடல் நினைவில் நிற்கிறது. சதீஷ் முருகனின் ஒளிப்பதிவு படத்தின் காட்சியனுபவத்தை மேம்படுத்துகிறது. அருணாச்சலம் முருகையன் படத்தொகுப்பு கவனிக்க வைக்கிறது.

மொத்தத்தில் எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல், ஜாலியாக சென்று நகைத்துவிட்டு பார்க்க 'பன்னிக்குட்டி' இந்த வீக் எண்டுக்கு ஏற்ற ஒரு ‘டீசன்ட்’ காமெடி படம்தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x