Published : 28 Jun 2022 01:19 PM
Last Updated : 28 Jun 2022 01:19 PM
ராமு மறைந்தாலும் அவர் தனது பணிகளுக்காகவும் கலைப்பங்களிப்புகளுக்காகவும் நினைவுகூரப்படுவார் என்று மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புகழஞ்சலி செலுத்தியுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வெளியிட்ட புகழஞ்சலிக் குறிப்பு: ''மாணவப் பருவத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் வழியே பொது வாழ்க்கைக்கு வந்த ராமு, இறுதிவரை இடதுசாரியாக வாழ்வை மேற்கொண்டவர். சாதி மறுப்பும் சடங்கு மறுப்பும் சொந்தவாழ்வில் பின்பற்றப்பட வேண்டியவை என்பதை உணர்த்தும்விதமாக தன் பெற்றோரின் இசைவுடன் காதல் மணம் புரிந்தவர்.
தென்சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை கட்டியமைக்கவும், அப்பகுதியின் கொண்டாட்டத்திற்குரிய நிகழ்வுகளில் ஒன்றாக சைதை கலை இரவினை வடிவமைக்கவும் பணியாற்றியவர்களில் இவரும் ஒருவர். ''கனவுகள் 2000'' என்ற தலைப்பில் புத்தாயிரமாவது ஆண்டில் நடத்தப்பட்ட நிகழ்வினை வெற்றிகரமாக்கியதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். நாட்டுப்புறக் கலைஞர்களின் நலவாரியம் அமைவதற்கு அடிகோலிய நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கைச் சங்கமத்தை முன்னின்று நடத்தியவர்.
1990ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை சென்னை கலைக்குழுவில் இணைந்திருந்த ராமு அக்குழுவினால் அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் பலவற்றிலும் கவனம்பெறத்தக்க பாத்திரங்களை ஏற்று நடித்தார்.
குறிப்பாக, பயணம் நாடகத்தில் அவர் ஏற்று நடித்த ''நகரதேவன்'' பாத்திரம் திரைத்துறையினர் உள்ளிட்ட பலரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியாய் இருந்தது. இயக்குநர் சசியின் ‘பூ’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி 'பூ ராமு'வாகியவர் 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'நெடுநல்வாடை' உள்ளிட்ட படங்களில் தனது இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தி தனி இடம் பிடித்தவர்.
'ஆட்டோ' ராமு, 'பூ' ராமு, 'கருப்பு' ராமு என நமக்குள் நிறைந்திருக்கும் ராமு மறைந்தாலும் அவர் தனது பணிகளுக்காகவும் கலைப்பங்களிப்புகளுக்காகவும் நினைவுகூரப்படுவார். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், உற்றார் உறவினர் யாவரது துயரிலும் தமுஎகச மாநிலக்குழு பங்கெடுக்கிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT