Published : 27 Jun 2022 03:20 PM
Last Updated : 27 Jun 2022 03:20 PM
'சூர்ய வம்சம்' திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்து இன்று நாஸ்டால்ஜியாக நினைவில் தேங்கியிருக்கும் படத்திற்கான ட்ரிபியூட் இது.
'காலம் எவ்வளவு வேகமாக சுற்றுகிறது பார்த்தீர்களா?' - விக்ரமனின் 'சூர்யவம்சம்' படத்திற்கு இன்றுடன் 25 வயது. 1997-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான இப்படத்தை இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் கூட குடும்பத்தோடு சேர்ந்து பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பர்ஃபெக்ட் நாஸ்டால்ஜி மெட்டிரியல் என்றால், அது 'சூர்யவம்சம்' தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்று எத்தனை படங்கள் 'குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி' என புகழப்பட்டாலும் உண்மையான குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக உயர்ந்து நிற்கிறது 'சூர்யவம்சம்'.
ஒரே பாடலில் பணக்காரராக சரத்குமார் முன்னேறும் காட்சியை பார்த்து அன்று சிலிர்த்துவிட்டு சில்லறையை சிதறவிட்டோம். இன்று அவை அனைத்தும் மீம் கன்டென்டுகளாக மாறி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு படம் ஒரு காலத்தில் புகழப்பட்டும், காலம் கடந்து அதன் காட்சிகள் எதோ ஒருவகையில் மக்களை மகிழ்வித்துக்கொண்டும் இருக்கிறது என்றால் அது 'சூர்யவம்சம்' படம் போன்ற மிகச் சில படங்களால் மட்டுமே முடியும்.
யூடியூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டா ரீல் என அழிக்க முடியாத தடங்களைப் பதிய வைத்திருக்கிறது ‘சூர்யவம்சம்’. அந்த படத்தின் வசனங்கள் இன்றும் ட்ரெண்டாகிறது. உதாரணமாக, இன்ஸ்டாகிராமில் ரீல்களை திறந்தால், திருமணங்களில் மணமக்களை ஓரமான நிற்க வைத்துவிட்டு, நண்பர்கள் மணமக்கள் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, 'ஏங்க சின்ராசு' என பேசும் வசனத்தை வைத்து வீடியோவை உருவாக்குகின்றனர். இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது இந்த டைப் ஆஃப் வீடியோ. பார்ப்பவர்களை ரசிக்கவும் வைக்கிறது.
அதேபோல அண்மையில், 'காலம் எவ்வளவு வேகமா சுழலுது பாத்தீங்களா' என தேவயானி பேசும் வசனம் ஹிட் அடித்தது. எதற்கெடுத்தாலும் அந்த வசனத்தைபோட்டு மீம்களை தெறிக்கவிட்டார்கள் நெட்டிசன்கள். பெரும்பாலான சூழ்நிலைகளுக்கு பக்காவாக பொருந்தும் வசனம் அது.
'இந்தாங்க ஃப்ரெண்ட் பாயசம் சாப்டுங்க' என சக்திவேல் கவுண்டரிடம் அவரது பேரன் பாயாசம் கொடுக்கும் காட்சி, எப்போதும் சலிப்புத் தட்டாத வசன வகையறாவைச் சேர்ந்தது. வாட்ஸ்அப்களின் ஸ்டிக்கர்களில் இருவரின் உரையாடல்களில் சுவைக் கூட்டுவதில் நிச்சயம் சூர்யவம்சம் படத்தின் வசன ஸ்டிக்கர்களுக்கு முக்கிய பங்குண்டு.
'பாயசம் சாப்டுங் ஃப்ரண்ட்' வசனத்தில் எக்கச்சக்கமான மீம்கள் உலா வருவதை காண முடியும். 'படிச்ச நான் எங்க... படிக்காத நீ எங்க?' என்ற காட்சியின் வீடியோவை மட்டும் கட் செய்து ட்ரெண்டாக்கினார்கள்.
அவ்வளவு ஏன்... தந்தையர் தினத்தில் 'தெய்வங்களெல்லாம் தோற்றே போகும்' பாடலே தோற்றுப்போகும் அளவுக்கு, தன் தந்தை சக்திவேல் கவுண்டரை நினைத்து உருகி, மருகி, சின்ராசு பேசும் வசனம் தான் எல்லாரின் வாட்ஸ்அப் ஸ்டேடஸிலும் நிரம்பி வழிந்தது. 'உளி விழும்போது வளின்னு அழுத எந்தக் கல்லும் சிலையாக முடியாது. ஏர் உழும்போது கஷ்டம் நினைத்த எந்த நிலமும் விளைஞ்சு நிக்காது. அது மாதிரி தான் அப்பா கோவப்பட்றதையும், திட்றதையும் தப்பு நெனைக்கிற எந்த புள்ளையும் முன்னுக்கு வர முடியாது' என அவர் பேசும் வசனம் க்ளாஸிக்!(?)
இன்னும் எத்தனை தந்தையர் தினம் வந்தாலும் அதுதான் வாட்ஸ்அப் ஸ்டேடஸ். மகன்களின் அந்த ஸ்டேடஸ்களை பார்க்கும் அப்பாக்களெல்லாம் அந்தக் காட்சியில் ஆனந்தக் கண்ணீர்விடும் ராதிகாவைப்போல தங்களுக்கு அழுது கொண்டார்கள் என்பது நிகழ்கால வரலாறு.
தன் மாமனாரிடம் தேவயாணி ஆசிர்வாதம் வாங்க பயன்படுத்தும் டெக்னிக்கை கண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் அன்று மிரண்டு போனார்கள். காதல் ஜோடிகளுக்கான வியூகத்தை வகுத்து கொடுத்த டெக்னிக் அது. இன்று அது மீம் டெம்ப்ளேட்டுகளாக மாறியிருக்கிறது. தவிர, அன்றாட வாழ்க்கையிலும் கூட, 'இவரு பெரிய தேவயானி... நான் சக்திவேல் கவுண்டரு. கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குறாங்க' என புழக்கத்தில் இருக்கின்றன. மனதில் என்றும் படிந்த காட்சிப் படிமம் அது.
அதேபோல முன்னேறத்துடிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு 'நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பாக்குது' பாடல் ஒரு மோட்டிவேஷன் டோஸ். இறுதிக் காட்சியில் ஆனந்த்ராஜின் கழுத்தைப் பிடித்து 'என்ர வம்சத்துல பொறந்தவங்களுக்கு விரோதிய கூட வாழ வைச்சுதான்டா பழக்கம்' எனப் பேசும் காட்சிகள் நூற்றுகணக்கான வடிவங்களில் வார்த்தை மாற்றம் பெற்றும் இன்றும் மீம்ஸ்களாக சுற்றிக்கொண்டிருக்கின்றன.
இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம். 25 ஆண்டுகளுக்கு முன்பு, சினிமா ரீல் ஃபார்மெட்டில் திரையரங்குகளில் வெளியான 'சூர்ய வம்சம்', பிறகு விசிடி, டிவிடியாக பரிணமித்து, யூடியூப்களில் வலம் வந்து, தற்போது மீம்ஸ் டெம்ப்ளேட்களாகவும், இன்ஸ்டா ரீலாகவும் மாறியிருப்பது ஒரு பெரும் வெற்றியின் அடையாளமேயல்லாமல் வேறில்லை.
இன்று அந்தப் படத்தின் காட்சிகள் கிண்டலாக பேசப்பட்டாலும், எப்போதும் மனதிலிருந்து நீங்காத ஒரு மிகப்பெரிய நாஸ்டால்ஜி திரைப்படம் அது. 25 ஆண்டுகள் மட்டுமல்ல, இன்னும் எத்தனை வகையான நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் பிறந்தாலும் 'சூர்யவம்சம்' அந்திசாயாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT