Published : 12 Jun 2022 05:32 PM
Last Updated : 12 Jun 2022 05:32 PM
நடிகர் விஜயுடன், லோகேஷ் கனகராஜ் இணையும் 'விஜய் 67' படம் கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் 64 வது படமான 'மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என பெரும் பட்டாளமே நடித்திருந்தனர். இதையடுத்து விஜயின் 65-வது படமாக நெல்சன் இயக்கத்தில் வெளியானது 'பீஸ்ட்'. இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் 66-வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். நடிகர் ஷ்யாமும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 67-வது படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதனை லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனம் தயாரிக்கிறது. இணை தயாரிப்பாளராக சேவியர் பிரிட்டோவும் இணைந்துள்ளார். கிட்டத்தட்ட 'மாஸ்டர்' கூட்டணி மீண்டும் கைகோத்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதம் 3-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப்பிறகு தனது அடுத்த படத்தின் கதைக்களத்தை லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில், ரசிகர் ஒருவர் எழுப்பும் கேள்விக்கு பதிலளிக்கும் லோகேஷ் கனகராஜ், 'அடுத்து கேங்க்ஸ்டர் படம் தான்' என்று கூறியுள்ளார். இதன் மூலம் விஜயுடன் அவர் இணையும் 'விஜய் 67' படம் கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT