Published : 11 Jun 2022 09:27 PM
Last Updated : 11 Jun 2022 09:27 PM
'' 'கைதி 2' படத்தை உடனே ஆரம்பிக்கலாம்தான். ஆனால், விஜய் படம் முடித்த பிறகுதான் லோகேஷ் கனகராஜ் 'கைதி 2' ஆரம்பிப்பார்'' என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
'விக்ரம்' படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். வசூல் ரீதியாக படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. நான்கு முன்னணி நடிகர்களை வைத்து, 'கைதி' படத்தின் சீக்குவலாக படத்தை கொண்டு சென்ற விதம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து 'கைதி 2' படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், 'கைதி' படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பல்வேறு பதில் அளித்தார். அதில், 'கைதி 2' படம் எப்போது தொடங்கும் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "விக்ரம் படம் வெளியானதில் இருந்து 'கைதி 2' மீது ரசிகர்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. உடனே ஆரம்பிக்கலாம் தான். ஆனால், லோகேஷ் கனகராஜ், விஜய் படம் முடித்த பிறகு தான் 'கைதி 2' ஆரம்பிப்பார்.
அதுமட்டுமில்லாமல், 'கைதி' படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் கதை நிச்சயம் பத்து மடங்கு பெரிதாக இருக்கும். சாம் சி.எஸ். இசையமைப்பாரா என்றால் அதை எல்லாம் இப்போதே முடிவு செய்வது கஷ்டம். படம் ஆரம்பிக்கும் போதுதான் அவர்களின் தேதி, மற்ற வேலைகள் பற்றி தெரிய வரும்" என்றார்.
மேலும்," 'தளபதி 67' படத்தில் கமல் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு உண்டா என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "அது கதையின் தேவையைப் பொறுத்தது. லோகேஷ் கனகராஜும், கமல்ஹாசனும்தான் அதை பற்றி முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
மேலும், கடந்த 2019-ல் விஜய்யின் 'பிகில்' படத்தோடு எஸ்.ஆர். பிரபு தயாரித்த 'கைதி' வெளியானது. அதுபோலவே, இந்த வருடம் விஜய்யின் 'பீஸ்ட்' படத்திற்குப் போட்டியாக தமிழகத்தில் எஸ்.ஆர்.பிரபு விநியோகித்த 'ஆர்.ஆர்.ஆர்.' படம் வெளியானது. இப்படி விஜய் படத்திற்கு போட்டியாகவே படங்கள் வெளியிடுவது ஏன் என்ற கேள்விக்கு எஸ்.ஆர். பிரபு, " அது நாங்கள் வேண்டும் என்றே பார்த்து படங்கள் வெளியிடவில்லை. அது யதேச்சையாக அமைந்தது. போட்டி மனப்பான்மை இல்லை" என விளக்கமளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT