Published : 10 Jun 2022 04:37 PM
Last Updated : 10 Jun 2022 04:37 PM
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க எப்போதும் தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத் மற்றும் கவுரவ வேடத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘விக்ரம்’. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, சென்னையில் செய்தியாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் நேற்று கூறியதாவது: "‘விக்ரம்’ படத்தின் வெற்றியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு முன்பு சில்வர் ஜூப்ளி உட்பட பல வெற்றிகள் கிடைத்திருந்தாலும், அது அமைதியாக நடந்திருக்கிறது. இப்போது எது செய்தாலும், தும்மினால்கூட பீரங்கி வெடித்ததுபோல பிரதிபலிக்கப்படுகிறது. அதற்கு காரணம் ஊடக பலம்.
நாடு முழுவதும் இப்படம் வெற்றி பெற்றிருக்கிறது. நான் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்பட வெற்றியின்போதும் சந்தோஷமாக இருந்தேன். அந்த படம் உடனடியாக இல்லாமல் 6 மாத இடைவெளிக்கு பிறகு இந்திக்கு சென்றது. அங்கும் கொண்டாடினார்கள். ‘அவ்வை சண்முகி’ படமும் இந்திக்கு சென்று வெற்றி பெற்றது. ‘ஏக் துஜே கேலியே’ படத்துக்கு கிடைத்த வரவேற்புபோல, தற்போது நாடு முழுவதும் ‘விக்ரம்’ திரைப்படம் வரவேற்பை பெற்றுள்ளதில் மகிழ்ச்சி.
நான் வட நாட்டுக்கு சென்றிருந்தபோது, ‘‘தென்னிந்திய படங்களின் ஆதிக்கம் வட இந்திய சினிமாவில் இருக்கிறதே?’’ என்ற தொனியில் கேட்டார்கள். ‘‘சூரியனிலேயே உத்தராயணம், தட்சிணாயணம் என இருக்கிறது. அது மாறி மாறி வரும். என்னைப் பொருத்தவரை இந்திய படம் வெற்றி பெற்றது’’ என்று சொன்னேன். ‘ஷோலே’, ‘ஆராதனா’ படங்களை நாங்கள் அப்படித்தான் பார்த்தோம். அப்போது மொழி தெரியாமல், சப்-டைட்டில்கூட இல்லாமல் பார்த்தோம்.
‘‘ரஜினியுடன் இணைந்து நடித்து வருடங்கள் ஆகிவிட்டன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நீங்கள் ரஜினியுடன் இணைந்து நடிப்பீர்களா?’’ என்று கேட்கின்றனர். முதலில் இதை அவரிடம் (ரஜினி) கேட்க வேண்டும். அவர் ஒப்புக்கொண்ட பிறகு, இவரிடம் (லோகேஷ்) கேட்க வேண்டும். நாங்கள் 3 பேரும் ஒப்புக்கொண்ட பிறகு உங்களிடம் (மீடியா) சொல்ல வேண்டும். ரஜினியுடன் நடிக்க நான் எப்போதும் தயார்.
மருதநாயகம் படம் தயாராகுமா?
‘விக்ரம்’ படத்தின் வெற்றியால், ‘மர்மயோகி’, ‘சபாஷ் நாயுடு’, ‘மருதநாயகம்’ படங்கள் உயிர்ப்பிக்கப்படுமா? என்று கேட்கின்றனர். இவ்வளவு தாமதத்துக்கு பிறகு எனக்கே சிரத்தை இல்லை. என்னை பொருத்தவரை புதிது புதிதாக படங்கள் பண்ண வேண்டும் என்று நினைப்பவன். அவை எனக்கு பழசாகத் தெரிகின்றன. தேவைப்படும் என்றால் அதற்கு தயாராக இருப்பவர்கள் என்னோடு இணைய வேண்டும்.
நடிகர் விஜய்யின் படத்தை தயாரிப்பது பற்றி கேட்கிறீர்கள். பேசியிருக்கிறோம். அதற்கான கதை வேண்டும், அவருக்கும் நேரம் வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இருந்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT