Published : 25 May 2022 04:07 AM
Last Updated : 25 May 2022 04:07 AM
கமல்ஹாசன் நடித்துள்ள ’விக்ரம்’ படம் இதுவரை இல்லாத அளவுக்கு ரிலீஸுக்கு முன்பே அதிக தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன. இந்தப் படத்தின் அறிமுக டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
காரைக்குடி, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதன் பிறகு ‘பிக் பாஸ் சீசன் 5’, கமலுக்கு கரோனா பாசிட்டிவ் ஆகிய காரணங்களால் தாமதமான இறுதிகட்ட படப்பிடிப்பு, சில வாரங்களுக்கு முன்னர் முடிந்தது. எனினும், உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், லோகேஷ், அனிருத் என முக்கிய நட்சத்திரங்கள் இணைந்திருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளன. இந்த எதிர்பார்ப்பு படத்தின் வியாபாரத்திலும் எதிரொலித்துள்ளது. ரூ. 172 கோடி அளவுக்கு ரிலீஸுக்கு முன்பே வியாபாரம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
'விக்ரம்' தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ரெட் ஜெயன்ட், 35 கோடி ரூபாய் மதிப்பில் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. அதேபோல், கேரள உரிமையை ஷிபு தமீம் 5.50 கோடிக்கும், தெலுங்கு உரிமையை நடிகர் நிதினின் நிறுவனம் 5.50 கோடிக்கும், கர்நாடக உரிமையை கற்பக விநாயகா ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் 4.25 கோடிக்கும் கைப்பற்றியுள்ளன.
இதுதவிர, ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் அனைத்து மொழிகளுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை ரூ.93 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே பாடல் உரிமம் 4.25 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை 25 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. இதெல்லாம் சேர்த்து ரூ. 172 கோடி அளவுக்கு ரிலீஸுக்கு முன்பே வியாபாரம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கமல் படங்களிலேயே இந்த தொகை இதுவரை இல்லாத அளவு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT