Published : 24 May 2022 12:37 AM
Last Updated : 24 May 2022 12:37 AM
வெளிநாட்டினர் தங்கள் திரைப்படங்களை படமாக்க இந்தியாவிற்கு வர வேண்டும் என கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா அரங்கில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது: "இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியா ஒரு பில்லியனுக்கும் அதிகமான திரைப்பட பார்வையாளர்களின் சந்தையாக திகழ்கிறது. இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014 -ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து திரைத்துறையினரின் நலனுக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திரைப்படத் தயாரிப்புத் துறையில் இருந்து திறமையான இந்திய ஸ்டார்ட் அப்களை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் எண்ணற்ற இந்திய திரைப்படத்துறையினர் பங்கேற்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.
வெளிநாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்களை இணைத்து திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு இந்திய அரசாங்கம் பல்வேறு சலுகைகள் வழங்குகிறது. அதேபோல இந்தியாவில் வெளிநாட்டுப் படங்களின் படப்பிடிப்புக்கு ஊக்குவிப்புகளும் வழங்கப்படுகிறது. கதை சொல்லும் பாரம்பரியம், ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் பாரம்பரியத்துடன், இந்தியா இப்போது மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திரைப்படத் தணிக்கை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான அலுவலகத்தை விரிவுபடுத்தி, ஒற்றைச் சாளரத்தின் கீழ் பல்வேறு அனுமதிகளைப் பெறுவதற்கான நடைமுறையை தடையின்றி செயல்படுத்துகின்றன.
இன்றையச் சூழலில் பார்வையாளர்களுக்கு மொழி ஒரு தடையாக இல்லை. இந்தியாவில் இருந்து வரும் பிராந்தியத் திரைப்படங்கள் இப்போது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த விழாவில் பங்கேற்றுள்ள வெளிநாட்டுத் திரைப்படக் கலைஞர்கள் அனைவரும் இந்தியாவில் படமெடுக்க வாருங்கள். இந்தியாவில் நடைபெறும் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கெடுங்கள்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, ஸ்வீடன், ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த திரைப்படத்துரையினர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT