Published : 03 May 2022 05:49 PM
Last Updated : 03 May 2022 05:49 PM

இந்தி தேசிய மொழி அல்ல... நம்மை பிளவுபடுத்தும் மொழிப் பிரச்சினை வேண்டாம்: சோனு நிகம்

புது டெல்லி: 'இந்தி நமது தேசிய மொழி அல்ல. எனவே இந்தி பேசாத மாநிலங்களில் அதை திணிக்கும் முயற்சி பிளவை ஏற்படுத்தும்' என்று தனது கருத்தை பகிர்ந்துள்ளார் பாடகர் சோனு நிகம்.

அண்மையில், இந்தியாவின் தேசிய மொழி குறித்து நடிகர்கள் அஜய் தேவ்கனுக்கும், கிச்சா சுதீப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என சொல்லியிருந்தார் அஜய் தேவ்கன். அதை லாஜிக்காக மறுத்திருந்தார் சுதீப். தொடர்ந்து கங்கனா ரனாவத் உட்பட பல பிரபலங்கள் அதுகுறித்து தங்களது கருத்தை சொல்லி இருந்தனர். அந்த வரிசையில் இப்போது புதிதாக இணைந்துள்ளார் சோனு நிகம்.

"இந்தி நமது தேசிய மொழி என்று எந்த சட்டத்திலும் எழுதப்பட்டு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அந்த மொழி அதிகம் பேசப்படும் மொழியாக இருக்கலாம். இருந்தாலும் அது தேசிய மொழி அல்ல. உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ் என்பதை நாம் அறிவோமா? தமிழுக்கும், சமஸ்கிருதத்திற்கும் இடையே விவாதம் கூட நடந்து வருகிறது. ஆனால், தமிழ்தான் தொன்மையான மொழி என மக்கள் சொல்லி வருகின்றனர்.

நாம் ஏன் இதை செய்கிறோம்? இந்த விவாதம் ஏன் இப்போது நடக்கிறது? நமது பக்கத்து நாடுகளைப் பாருங்கள். ஆனால், நாமோ உள்நாட்டிலேயே பிளவை ஏற்படுத்துகிறோம். மக்களுக்கு எந்த மொழி பேச விருப்பமோ, அந்த மொழியை அவர்கள் பேசட்டும். தமிழர்கள் தமிழை பேசட்டும். அவர்களுக்கு சவுகரியமாக இருந்தால் ஆங்கிலத்தில் பேசட்டும். ஆங்கில மொழியும் நமது சமூகத்திலும், கலாசாரத்திலும் ஓர் அங்கமாக உள்ளது. நமது நாட்டில் ஏற்கெனவே நிறைய பிரச்சனைகள் உள்ளன. அதில் புதியதொரு பிரச்சினையாக இதனை சேர்க்க வேண்டாம்" என தனியார் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பொது தெரிவித்துள்ளார் சோனு நிகம்.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், வங்காளம் உட்பட பல்வேறு மொழிகளில் அவர் பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x