Published : 13 Apr 2022 03:16 PM
Last Updated : 13 Apr 2022 03:16 PM
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் இடையிலான பிரச்சினையில் தங்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவே வழக்கிலிருந்து நீக்கக் கோரி வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவில், எனது நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரிப்பதற்காக, 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் செய்து, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசினார். 2019-ம் ஆண்டு மே மாதமே படம் வெளியான நிலையில், 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. 4 கோடி ரூபாய் பாக்கி சம்பளம் இதுவரை தரப்படவில்லை.
11 கோடி ரூபாய்க்கான டிடிஎஸ் தொகையைப் பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா, அதை வருமான வரித்துறையில் செலுத்தாததால், 2019-20, 2020-21ஆம் ஆண்டுகளுக்கான டிடிஎஸ் தொகை 91 லட்ச ரூபாயை செலுத்த வேணடுமென தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து முன்னரே வழக்கு தொடர்ந்துள்ளேன்.
எனவே 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை எனக்கு கொடுக்கவும், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரித் துறையிடம் செலுத்துவும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும். அந்தத் தொகையை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரிபெல், விக்ரம் நடிக்கும் சீயான் 61, சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடுகளை செய்வதற்கும், திரையரங்க வெளியீடு மற்றும் ஓடிடி வெளியீடு ஆகியவற்றின் விநியோக உரிமைகளை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
3 ஆண்டுகளுக்குப் பின்னர், உண்மைத் தகவல்களை மறைத்து, தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பதில்மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகார்த்திகேயன் வழக்கில் எதிர்மனுதாரரான வருமான வரித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரிதுறை அதிகாரி தாமோதரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த பதில் மனுவில், சிவகார்த்திகேயன் மற்றும் ஞானவேல்ராஜா இடையே உள்ள பிரச்சினைகள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அது அவர்கள் இருவருக்கும் இடையிலானது. இதற்கும் வருமான வரித்துறைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
எனவே சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் இருந்து வருமான வரித்துறையை நீக்க வேண்டும் என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT