Published : 09 Apr 2022 09:45 PM
Last Updated : 09 Apr 2022 09:45 PM
''என் முதல் படத்தில் நான்தான் ஹீரோன்னு சொன்னபோது யாருமே நம்பலை'' என்று கே.ஜி.எஃப் நடிகர் யஷ் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
'கே.ஜி.எஃப் 2' படத்துக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தில் படத்திற்கு 200-க்கும் அதிகமான திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கே.ஜி.எஃப் படம் குறித்தும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் நடிகர் யஷ் மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக யஷ் பேசுகையில், ''என்னை பொறுத்தவரை நான் அடிமட்டத்திலிருந்து வந்தவன். விசிலடித்து ஹீரோவைக் கொண்டாடிய கூட்டத்திலிருந்து இங்கே வந்தவன் நான். ரஜினி சார் சொன்னது போல, 'கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கிடைச்சாலும் நிலைக்காது' அது மாதிரி தான் எல்லாம். சினிமால நீங்க கஷ்டப்பட்டீங்கன்னா தான் உங்களுக்கான இடம் கிடைக்கும்.
யாரும் வாங்கி கொடுத்து ஈஸியா வந்தா அதோட மதிப்பு உங்களுக்கு தெரியாது. கே.ஜி.எஃப் 2 படத்தை பொறுத்தவரை மாஸ் என்டர்டெயின்ட் படமாக உருவாயிருக்கு. மாஸ் இல்லன்னா எப்டிங்க... அது நம்ம ஊர் கலாசாரம். படம்ங்குறது இங்க ஒரு ஃபெஸ்டிவல் மூட். அப்படியில்லன்னா எனக்கே போர் அடிச்சிடும். ரசிகர்களுக்கு புடிக்கணும். செலிபிரேட் பண்ணனும். எனக்கு ஒரு குடும்பம் இருந்துச்சு. இந்த படத்துக்கு அப்புறம் ரசிகர்கள் என்கிற பெரிய குடும்பம் கெடைச்சிருக்கு. நம்ம எல்லாரும் ஒண்ணுதான். நம்ம பேசுற மொழி, கலாசாரம் மட்டும் மாறியிருக்கலாம். மத்தபடி நம்ம எல்லாம் மனுசங்க தான்.
நான் எங்க போனாலும் என் சொந்த வீட்டுக்கு, சொந்த ஊருக்கு போற மாதிரி இருக்கு. அப்டியொரு வரவேற்பு இருக்கு. உங்களுக்கொரு நல்ல நோக்கம் இருந்தா நீங்க எங்க போனாலும் உங்கள நல்லபடியா வரவேற்பாங்க. நான் முதல் படம் பண்ணப்ப என்ன யாருமே ஹீரோவா நம்பவே இல்லை. அது எல்லாமே சாத்தியமானது ரசிகர்களாலதான். அவங்களுக்கு பிடிச்சா கொண்டாடுவாங்க. அவங்கதான் எல்லாம்.
எங்க அப்பா ஒரு பஸ் டிரைவர். நடுத்தர குடும்பத்துலிருந்து வந்தவன்தான் நான். எல்லார் வாழ்க்கையில இருக்குற மாதிரியான தடைகளும், சிக்கல்களும் எனக்கும் இருந்துச்சு. சின்ன வயசுல இருந்து நான் ஹீரோவாகணும்னு முடிவு பண்ணிருந்தேன். கல்ச்சுரல்ஸ்ல நெறைய கலந்துகிட்டேன். அப்புறம் அது எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. எங்க வீட்ல முதல்ல படி, அப்புறம் உன் கனவைத் தேடி போன்னு சொன்னாங்க. அப்புறம் சீரியல் போயிட்டு, அங்கிருந்து அப்டியே சினிமாவுக்குள்ள நுழைஞ்சேன். இப்போ அப்படியே போயிட்டு இருக்கு. கே.ஜி.எஃப் 2 கண்டிப்பா ரசிகர்களுக்கு பிடிக்கும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT