Published : 07 Apr 2022 03:21 PM
Last Updated : 07 Apr 2022 03:21 PM
அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு பதவிகளில் உள்ளவர்களை இழிவுப்படுத்தும் வகையிலான மீம்ஸ்களை பத்திரிகை, போஸ்டர், இணையதளம் உள்ளிட்ட எந்த தளத்திலும் பதிவிடக் கூடாது என விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசு பதவியில் உள்ளவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகை, இணையதளங்கள், போஸ்டர் என எந்த தளத்திலும் பதிவிடக் கூடாது. அதேபோல் மீம்ஸ் உள்ளிட்ட எதையும் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெளியிடக் கூடாது என தெரிவித்துள்ளார். இது நடிகர் விஜய்யின் கடுமையான உத்தரவின்பேரில் ஏற்கெனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். அதை மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொண்டதோடு, இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம்.
இருப்பினும், விஜய் அறிவுறுத்தலை மீண்டும் யாரேனும் மீறினால், இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை விஜய் உத்தரவின்பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
’பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகவுள்ள சூழலில் விஜய் தரப்பிலிருந்து இப்படியொரு அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில், விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் அரசியல் கட்சித் தலைவர்களையும், அரசியலில் உள்ளவர்கள் குறித்து விமர்சித்தும், கேலி செய்தும் மீம்ஸ்களை பரப்பி வருகின்றனர். மேலும், சில இடங்களில் அரசியல் தலைவர்களை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் வகையிலும், தன் பெயருக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT