Published : 07 Mar 2022 04:18 PM
Last Updated : 07 Mar 2022 04:18 PM
தென்னிந்திய மொழிப் படங்கள் இந்தியா முழுவதும் அதிகமாக விரும்பப்படுவதற்கான காரணங்களை அடுக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'வலிமை' கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இதன் வசூல் ரூ.100 கோடியை கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே, தென்னிந்திய மொழி படங்கள் சமீப காலங்களில் வசூலில் பெரிய சாதனை படைத்து வருவது குறித்து ’வலிமை’ தயாரிப்பாளர் போனி கபூர் பேசியுள்ளார்.
அதில், "ஒட்டுமொத்த இந்தியாவுக்கு தகுந்த மாதிரி பெரிய பட்ஜெட்டில் தென்னிந்திய மொழி திரைப்படங்கள் பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றன. அதனால்தான் அதன் டப்பிங் படங்கள் வடமாநிலங்களிலும் நன்றாக ஓடுகின்றன. தென்னிந்தியப் படங்களில் இந்தியப் பார்வையாளர்கள் ரசிக்கும்படியான குடும்பம், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்து தயாரிக்கப்படுகிறது. மேலும், இசையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கதை எதுவாக இருந்தாலும் சரி, அங்கு ஹீரோ ஹீரோவாகவே இருப்பார்.
இன்று, பாலிவுட் திரைப் படைப்பாளிகள் சிலர் கே.எஃப்.சி, மெக்டொனால்டு, பீட்சா போன்று படங்களைக் கொடுக்கிறார்கள். அவர்களிடம் நாம் என்ன கேட்கிறோமோ அது மட்டுமே கிடைக்கும். அதேசமயம், தென்னிந்திய படைப்பாளிகளிடம் சப்பாத்தி, சோறு, பருப்பு, கூட்டு, சிக்கன் என அனைத்தும் கலந்த கலவையாக படங்களை கொடுப்பார்கள். பார்வையாளர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்.
டப்பிங் படங்களின் சாட்டிலைட் உரிமைக்கு வடஇந்திய சேனல்களிடம் நல்ல டிமாண்ட் உள்ளது. அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு போன்ற தென்னிந்திய நடிகர்களின் படங்களின் டப்பிங் பாதிப்புகள் 20 முதல் 25 கோடி ரூபாய் வரை விற்கப்படுகின்றன. இந்தி படங்கள் கூட இந்தத் தொகைக்கு விற்கப்படுவதில்லை. இதன்பொருள், தென்னிந்திய இயக்குநர்கள் ரசனையான படங்களை எடுக்கிறார்கள். எனவேதான் நான் முதலில் தென்னிந்திய படங்களை எடுக்க முடிவெடுத்தேன்" என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT