Last Updated : 03 Mar, 2022 04:34 PM

 

Published : 03 Mar 2022 04:34 PM
Last Updated : 03 Mar 2022 04:34 PM

முதல் பார்வை | ஹே சினாமிகா - யூகிக்கக் கூடிய காதல் களத்தில் திகட்டாத காட்சிகள்!

கணவரைப் பிரிய வழிதேடும் மனைவி, இன்னொரு பெண்ணை தனது கணவரைக் காதலிக்குமாறு நடிக்கச் சொன்னால், அதுவே 'ஹே சினாமிகா'.

துல்கர் சல்மான், அதிதி ராவ் இருவரும் முதல் சந்திப்பிலேயே காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள். இரண்டு வருட இல்லற வாழ்க்கைக்குப் பிறகு துல்கரின் அதீத காதல் மற்றும் நியாயமான செயல்களால் சலிப்படையும் அதிதி, அவரை பிரிய நினைக்கிறார். அதற்கான வழியை தேடிக்கொண்டிருக்கும்போது, உளவியல் நிபுணரான காஜல் அகர்வாலை சந்திக்கிறார். அவரிடம் கணவரை விவாகரத்து செய்ய ஐடியா கேட்கும் அதிதி, ஒருகட்டத்தில் காஜலையே கணவரைக் காதலிக்குமாறு நடிக்கச் சொல்கிறார். இதன்பிறகு இவர்கள் மூவர் வாழ்க்கையிலும் என்ன நடக்கிறது என்பதே 'ஹே சினாமிகா' திரைக்கதை.

யாழன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான். ஆர்ப்பாட்டம், அதிரடி ஆக்ஷன், பஞ்ச் வசனங்கள் என கமர்ஷியல் ஹீரோவுக்கு உரித்தான எந்த அம்சங்களும் இல்லாமல் எதைக் கொடுத்தாலும் பேசிக்கொண்டே இருக்கும் ஒரு 'ஹவுஸ் ஹஸ்பெண்ட்' கேரக்டரே யாழன். இதனை தனக்கே உரிய பாணியில், இயக்குநர் சொல்லைத் தட்டாமல், அலட்டாமல் கச்சிதமாக செய்துள்ளார் துல்கர். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தகுதியான கதையாக துல்கர் 'ஹே சினாமிகா'வை தேர்ந்தெடுத்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அவரின் கேரக்டரை இன்னும் கொஞ்சம் துள்ளலாக கொடுத்திருக்கலாம் என்று தோன்ற வைக்கிறது.

யாழனின் மனைவி மௌனாவாக அதிதி ராவ். துல்கர், காஜல் இருந்தாலும் அவர்களை ஓரங்கட்டி அதிதியே படம் முழுக்க ஆட்கொள்கிறார். அந்த அளவுக்கு அவரின் பாத்திரம் ஈர்க்கிறது. பொறாமை, விரக்தி, காதல் போன்ற உணர்ச்சிகளை அதிதி வெளிப்படுத்தும் விதம் பார்க்க நன்றாக உள்ளது. மற்றவர்களை விட, படத்தின் முடிவில் அவரே மனதில் நிலைகொள்கிறார். உளவியல் நிபுணர் மலர்விழியாக காஜல் அகர்வால். துல்கர், அதிதிக்கு இணையான ரோல் இது. ஒரு மெச்சூர் உளவியல் நிபுணராக, ஆரம்பத்தில் காமெடியாக தொடங்கி இறுதியில் சீரியஸாக முடித்திருக்கிறார்கள். ஆனால், மனதில் இந்த ரோல் அவ்வளவு ஒட்டாதது போல் உள்ளது. காரணம், காஜலின் தோற்றத்தில் மாற்றங்கள். அந்த மாற்றம் திரைக்கு ஏற்றுவாறு அமையவில்லை. யோகி பாபு, ஆர்ஜே விஜய், நட்சத்திரா என லிமிட்டெட் நடிகர்களே வருகிறார்கள். அவர்களும் தங்களின் பாத்திரங்களுக்கு திருப்தி செய்கிறார்கள்.

கார்க்கி எழுதிய 'ஹே சினாமிகா' கதையின் நீரோட்டம், நாம் பலமுறை பார்த்ததுதான். ஜெயம் ரவியின் ’ரோமியோ ஜூலியட்’ என பல படங்களை இதற்கு உதாரணம் சொல்லலாம். என்ன, அந்தப் படங்களில் காதலர்களுக்குள் பொசஸிவ்னெஸ் ஏற்படும். இதில் இருவரும் காதல் கடந்து திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். அவ்வளவுதான். புதிதாக வேறு எதையும் காட்டவில்லை. அதனால்தான் என்னவோ படத்தை பார்க்கும்போதே திரைக்கதை யூகிக்கக் கூடியதாக இருந்தது.

அதிதியும், துல்கரும் முதல் சந்திப்பிலேயே காதல் வயப்படுவதாக காட்சிகள் விரிகிறது. காதலர்களாக இருக்கும்போது அவர்களுக்கு இருக்கும் பிணைப்பு, திருமணத்துக்கு பிறகு இல்லாமல் போனதுபோல் காண்பிக்கப்படுகிறது. மேலும், துல்கரின் குணதிசியங்கள் ஏன் அப்படி காண்பிக்கப்படுகிறது என்பதையும் பார்வையாளர்களுக்கு சரியாக நிறுவ தவறுகிறது திரைக்கதை. அதிதி தனது கணவரை விட்டுப் பிரிந்து செல்ல விரும்புவதை காமெடி கலந்து காட்சிப்படுத்தியுள்ளார்கள். ஆனால், அதற்காக சொல்லப்படும் காரணம் அவ்வளவு வலுவாக இல்லை என்பதைவிட ஓவராக இருக்கிறது.

அதேநேரம், தனி காமெடி டிராக் இல்லாமல், கதையுடன் சேர்ந்து சொல்லப்படும் நகைச்சுவைகளால் படத்தை எங்கேஜிங்காக கொண்டு செல்கிறது திரைக்கதை. படத்தின் மிகப்பெரிய பலமும் அதுதான். மேலும், கடைசி பத்து நிமிடம், படத்தில் காட்டப்படும் எமோஷன் காட்சிகள் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்கிறது.

பிரபு தேவா, லாரன்ஸ் வரிசையில் டான்ஸ் மாஸ்டர் டு இயக்குநர் புரோமோஷன் ஆகியிருக்கும் பிருந்தா மாஸ்டருக்கு 'ஹே சினிமிகா' ஒரு நல்வரவு கொடுக்கிறது. இயக்குநராக நடிகர்களிடம் சிறந்த நடிப்பை வாங்கியதில், காட்சிகளை படமாக்கிய விதத்தில் வெற்றிபெற்றுள்ளார். படத்தின் இசை கோவிந்த் வசந்தா. பின்னணி இசையால் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார். பாடல்கள் ரசிக்கும்படியாக இருந்தாலும் முணுமுணுக்கவைக்க தவறுகிறது. ஒளிப்பதிவு, வசனம் போன்றவை ரசிக்கவைக்கிறது.

திரைக்கதை தடுமாற்றம், அதை சரிக்கட்ட சில நியாயங்கள், பின்பு சினிமாட்டிக் க்ளைமேக்ஸ் என தமிழ் சினிமா ஏற்கெனவே பார்த்த யூகிக்க கூடிய கதையே 'ஹே சினாமிகா'. அந்தக் கதையை காமெடி ப்ளஸ் காதல் கொண்ட திகட்டாத காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x