Published : 01 Mar 2022 08:17 PM
Last Updated : 01 Mar 2022 08:17 PM

நா.முத்துக்குமாரின் இடத்தை யாருக்கும் என்னால் தர முடியாது: யுவன் நெகிழ்ச்சி

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. சரத்குமார் நடிப்பில் வெளியான ‘அரவிந்தன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது அவர் திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு திரையுலகினர் பலரும் யுவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

திரையிசையில் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த யுவன் பேசியது: “என்னோடு பணிபுரிந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி. என்னை இயக்கிக் கொண்டிருப்பது நீங்கள் தான். உங்களால் தான் இந்த நிலையில் இருக்கிறேன்.

மறைந்த நா.முத்துக்குமாருக்கு கொடுத்த இடம் வேறு, அதை யாருக்கும் என்னால் தர முடியாது, அவர் மிகச் சிறந்த பாடலாசிரியர். அவருடன் நிறையப் பாடல்களில் நிறைய வேலை பார்த்திருக்கிறேன். இப்போது விவேக், பா.விஜய் என நிறைய பேருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். என்னுடன் பயணித்த பாடலாசிரியர் அனைவருக்கும் நன்றி.

இந்த 25 வருடங்கள் எப்படிப் போனது என்பதே தெரியவில்லை. முதன்முறை இசையமைத்தபோது இப்போது மாதிரி சமூக வலைதளம் இல்லை. பாடல் ஹிட்டாகிறதா என்றே தெரியாது. யாராவது வந்து சொன்னால்தான் தெரியும், ஒரு முறை அம்மாவுடன் வெளியே போன போது, சிலர் “அங்க பாரு... யுவன் அம்மா” என்றார்கள். ஓகே, நம்மை இசையமைப்பாளராக ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என மகிழ்ச்சியாக இருந்தது. அம்மாவை உண்மையில் நிறைய மிஸ் செய்கிறேன். இன்று கூட நிறைய அவரை பற்றி நினைத்தேன். ஆனால், அந்த இடத்தை கடவுள் புண்ணியத்தில் என் மகள் நிறைவு செய்கிறாள், கடவுளுக்கு நன்றி.

இசைத்துறையில் நிறைய பேருடன் வேலை பார்க்க நினைத்தேன். லதா மங்கேஷ்கர் உடன் வேலை செய்ய நினைத்திருந்தேன், முடியாதது வருத்தம்தான். நான் அதிகம் கேட்பது எப்போதும் அப்பா பாடல்கள்தான். வீட்டில் அவர் பாடல்கள் தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கும்போது என் மனைவி கூட திட்டுவார் ‘போதும்பா’ என்பார். ஆனால் எனக்கு அவர் பாடல்கள்தான் பிடிக்கும்.

விஜய் சாருடைய மகன் யுவனிசம் டி-ஷர்ட் போட்டிருந்தார், பின்னர் விஜய் சாரை சந்தித்தபோது, என் மகன் உங்களோட பெரிய ஃபேன் என்றார். அது மிக மகிழ்ச்சியாக இருந்தது. நான் இந்தி குறித்துப் போட்ட டி-ஷர்ட் குறியீடு கிடையாது. உண்மையிலேயே எனக்கு இந்தி தெரியாது. அதுதான், அதில் கருத்து எதுவும் இல்லை.

நான் ஆன்லைனில் அதிகம் இருக்க மாட்டேன். என் மனைவி தான் இருப்பார். என்னைப் பற்றி விஷயங்களைக் காட்டும்போது, சந்தோஷமாக இருக்கும். எனக்குப் படத்தை விட குடும்பம்தான் சந்தோஷம் தரும். அவர்களுடன் இருப்பதைத்தான் நான் அதிகம் விரும்புவேன்.

25 வருடங்கள் கடந்ததாகத் தெரியவில்லை, இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும் என நினைக்கிறேன். என் அம்மாவோட இழப்பு தான் இறைவன் பற்றிய தேடல் அதிகமாகக் காரணம். நானா இப்படி இசையமைக்கிறேன் எனத் தேடும்போது ஒரு புள்ளியில் போய் நிற்கும் அல்லவா, அதுதான் கடவுள் என நினைக்கிறேன். என் தயாரிப்பில் திரைக்கதை எழுதி வைத்திருக்கிறேன். அடுத்த வருடத்தில் நானே இயக்கப் போகிறேன்.

ரஜினி சார் படத்திற்கு நான் ரெடி. நிறைய சுயாதீன ஆல்பங்கள் செய்ய வேண்டும். நிறைய புது முயற்சிகள் செய்ய வேண்டும். இந்தப் பயணம் நல்லபடியாகத் தொடரும் என நம்புகிறேன்” என்றார் யுவன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x