Published : 23 Feb 2022 10:19 AM
Last Updated : 23 Feb 2022 10:19 AM

'தனித்துவம்' காட்டாததே தனித்துவம் - 'கன்டென்ட்'டுக்குள் கரையும் கார்த்தியின் 15 ஆண்டு கால திரைப் பயணம் 

'பருத்திவீரன்' வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த அசல் சினிமா குறித்து இன்றளவும் டீ-கோடிங் செய்யப்படுவதிலேயே தமிழ் திரைப்பட வரலாற்றில் அப்படத்துக்கான முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். 'பருத்திவீரன்' படம் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கார்த்திக்கும் 15 ஆண்டு கால திரைப் பயணத்தைக் கடக்கிறார். அவரது தனித்துவத்தைத் தேடிப் பார்க்கும்போது, 'தனித்துவம்' என்ற ஒன்றை வலிந்து காட்டுவதற்கு முற்பட விரும்பாத சினிமாவுக்கான நடிகராக இருப்பதையே தனது தனித்துவமாகக் கொண்டிருப்பதை உணரலாம்.

உலகின் எந்த மொழித் திரைத் துறையிலும் நட்சத்திர நடிகராக இருந்தால் மட்டுமே ஒருவரால் தசாப்தத்தைக் கடந்து முக்கியத் திரைக் கலைஞராக வலம் வர முடியும். அந்த வகையில், 15 ஆண்டு காலத்தை அலட்சியமாகத் தொட்டிருக்கும் கார்த்தி ஒரு நட்சத்திர நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ரசிகர்களால் 'மாஸ்' ஆகக் கொண்டாடப்படாமல், அதேவேளையில் எந்தச் சூழலிலும் அவர்களால் தவிர்க்க முடியாத நடிகராக நீடிப்பது என்பதில்தான் ஒரு 'க்ளாஸ்' ஒளிந்திருக்கிறது.

ஆம், கார்த்தி எனும் நடிகர் க்ளாஸ் முலாம் பூசப்பட்ட மாஸ் நடிகர். வேறு விதமாகச் சொல்ல வேண்டும் என்றால், தான் நடிக்கும் சினிமாவில் கரைந்துபோய் விடுவார். இதனாலே, அவர் நடிக்கும் திரைப்படங்கள் வெகுவாகப் பேசப்படுமே தவிர, அதிலே ப்ரொட்டாகனிஸ்டாக பயணித்திருக்கும் கார்த்தி மீதான பார்வை குவிந்திருக்காது. இதுதான் க்ளாஸ் ஆன நடிகர்களுக்கே உரிய முதன்மை அம்சம்.

கார்த்தியின் இந்தத் தன்மை 'பருத்திவீரன்' படத்திலிருந்தே ஆரம்பிக்கிறது. அப்படத்தில், அச்சு அசலான கிராமத்துக் கதாபாத்திரத்தில் எங்கும் துருத்தாமல் பிரித்து மேய்ந்திருப்பார். ஆனால், அப்படம் இன்று வரை பேசப்படுவது, அதன் ஒட்டுமொத்த 'கன்டென்ட்'டை முன்வைத்துதான். அதேதான் செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கும் நிகழ்ந்தது. தீவிர சினிமா ஆர்வலர்களால் எப்போதும் கொண்டாடப்படும் அந்தப் படத்தில், கார்த்தியின் பங்களிப்பைத் தவிர்த்துவிட்டு, அவருக்குப் பதிலாக வேறொரு நடிகரைப் பொருத்திப் பார்த்தால், இந்த அளவுக்கு முழுமை கிடைத்திருக்குமா என்பதே சந்தேகம். ஆனால், அதிலும் 'கன்டென்ட்'டுக்குள் புதைந்துபோய்விட்டார் கார்த்தி.

கார்த்தியை ஒவ்வொரு வீடுகளிலும் கொண்டுபோய் சேர்த்த சினிமா 'பையா'. அதில், அவரது இயல்பான நகைச்சுவை பாணியும், காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் யதார்த்த நடிப்பும் பல தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது. அதன் பின்னர், தொடர்ச்சியாக நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தவர், 'சிறுத்தை'யில் ஆக்‌ஷனில் மிரட்டியதையும் கவனிக்கலாம்.

2014-ல் வெளிவந்த 'மெட்ராஸ்' படத்திலும் மீண்டும் 'கன்டென்ட்'டுக்குள் கரைந்துபோனார் கார்த்தி. தான் நடிக்கும் படங்கள்தான் பேசப்பட வேண்டுமே தவிர, அவற்றில் தான் தனியாக ஈர்க்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாரோ அல்லது இது போகிறபோக்கில் நடக்கிறதோ என்றும் தோணலாம். அந்த அளவுக்கு படைப்பாளின் நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில்தான் ஆர்வம் காட்டியிருக்கிறார்.

பரிசோதனை முயற்சிகளில் நாட்டம் கொண்ட இளம் படைப்பாளிகளுக்கும் கார்த்தி மிக முக்கியமான சாய்ஸாக இருக்கிறார். 'காஷ்மோரா' ஒரு தோல்விப் படம்தான். ஆனால், அதில் மேக்கப்புக்காக மெனக்கெட்ட கார்த்தியின் அர்ப்பணிப்பு, அப்படக்குழு தவிர பிறர் அதிகம் அறியாத ஒன்று.

இன்று சூப்பர் ஸ்டார் நடிகர்களின் இயக்குநர்களாகத் திகழும் ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ் போன்றோரின் முகவரிப் படைப்புகளுக்கு நடிகராக உறுதுணை புரிந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆம், 'தீரன் அதிகாரம் ஒன்று', 'கைதி' குறித்ததுதான் இந்த ஸ்டேட்மென்ட். 'கைதி'யில் கார்த்தி 'டில்லி'யாகத்தான் தெரிந்தாரே தவிர, கார்த்தியாக அல்ல என்பதே கதாபாத்திரத்தில் ஒரு கலைஞன் தன்னைக் கரைத்துக்கொள்வதற்குச் சான்று.

ஆக்‌ஷன், காமெடி, யதார்த்த நடிப்புகளை தனது அபாரத் திறமையால் அலட்சியமாக வெளிப்படுத்துவதால்தான் என்னவோ, பல முன்னணி நடிகர்களுக்கு இருக்கின்ற தனித்த அடையாளங்கள் எதுவும் இவருக்கு ஒட்டிக்கொள்ளவில்லை. ரொமான்டிக்கிலும் இவருக்கு டஃப் தருவது சமகால தமிழ் நாயகர்களுக்கு கடினம்தான். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் 'காற்று வெளியிடை'. அந்தப் படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க நேரிட்டால், காதல் உணர்வில் தன்னிலை மறக்கும் ஒரு கதாபாத்திரத்தை கார்த்தி அணுகிய விதத்தை கூர்ந்து கவனிக்கலாம்.

எழுதி முடிக்கப்பட்ட ஒரு சினிமாவை படமாக்குவதில் பாதிச் சுமை குறைய வேண்டுமெனில், அப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களுக்குத் தேர்வு செய்யப்படும் நடிகர்களின் ஆற்றல்தான் துணைபுரியும் என்பது சினிமா உலகில் பரவலான பார்வை. அப்படி தங்களது சுமையைக் குறைக்க, இயக்குநர்களால் இலகுவாக நாடக் கூடிய நடிகர்களில் ஒருவராகவே கார்த்தி இன்றளவும் இருக்கிறார். இதற்கு காரணமே தனித்துவம் காட்ட விரும்பாத அந்தத் தனித்துவ அணுகுமுறைதான்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x