Published : 19 Feb 2022 11:52 AM
Last Updated : 19 Feb 2022 11:52 AM
‘தி காட்ஃபாதர்’ படங்களை இயக்கிய ஃப்ரான்சிஸ் ஃபோர்டு காப்போலா தனது கனவுப் படமான ‘மெகாலோபொலிஸ்’ படத்தை சொந்தமாக தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஹாலிவுட்டின் பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவர் ஃப்ரான்சிஸ் ஃபோர்டு கப்போலா. இவர் இயக்கிய ‘தி காட்ஃபாதர்’ படம் இன்றுவரை உலகமெங்கும் வெளியாகும் கேங்க்ஸ்டர் படங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது. 60 மற்றும் 70-களில் உச்சத்தில் இருந்த இவர் ஐந்து ஆஸ்கர் விருதுகள், ஆறு கோல்டன் குளோப் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். ‘தி காட்ஃபாதர்’ படவரிசை தவிர்த்து ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது 82 வயதாகும் கப்போலா கடந்த 2019 அன்று தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்படத்துக்கான கதையை தான் 80-களின் தொடக்கத்திலேயே எழுதிவிட்டதாகவும், பல்வேறு காரணங்களால் அதனை படமாக்க முடியாமல் போனதாகவும் கூறியிருந்தார். ‘மெகாலோபொலிஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளதாகவும் காப்போலா கூறியிருந்தார். ஒரு பெரும் பேரழிவுக்குப் பிறகு நியூயார்க் நகரம் மீண்டெடுவது பற்றியதே ‘மெகாலோபொலிஸ்’ கதை.
கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் பணிகள் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்துள்ளதால் இப்படத்துக்கான பணிகளை தொடங்கியுள்ளார் கப்போலா. மேலும் இப்படத்துக்காக நடிகர்கள் ஆஸ்கர் ஐசக், ஃபாரஸ்ட் விட்டேகர் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
பிரச்சினை என்னவென்றால், இப்படத்துக்கு பிரம்மாண்ட பொருட்செலவு தேவைப்படுவதால் எந்த தயாரிப்பு நிறுவனமும் இதனை தயாரிக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கப்போலோவே இப்படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் 120 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் உறுதி செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT