Published : 16 Feb 2022 10:45 AM
Last Updated : 16 Feb 2022 10:45 AM
திரைத்துறைக்கு புதிதாக வரும் இயக்குநர்கள் தங்கள் படங்களில் சாதி அடையாளங்களை தான் முன்னிறுத்துகிறார்கள் என்று இயக்குநர் அமீர் பேசியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர் இயக்கும் புதிய படம் ‘இறைவன் மிகப் பெரியவன்’. வெற்றிமாறன் - தங்கம் இருவரும் கதை எழுதும் இப்படத்தை அமீர் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவுள்ளார். இதனை அமீர் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இப்படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் துவக்கவிழாவில் இயக்குநர் அமீர் பேசியதாவது:
பாரதிராஜா படம் எடுக்கும்போதே நிறைய கதைகளை வெளியில் வாங்கி எடுப்பார். ஆனால் எல்லோரும் அவர் கதை என நினைப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேறொருவரின் கதையை படமாக எடுத்தால் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். அதை மாற்றலாம் என நானே துவங்கியது தான் இது.
நானும் வெற்றியும் சேர்ந்து தினமும் ஒரு படம் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். நான் வெற்றியிடம் ‘இறைவன் மிகப்பெரியவன்’ கதையை படமாக எடுக்கலாமா எனக் கேட்டேன். கண்டிப்பாக செய்யலாம் என்றார். இடையில் நான் இன்னொரு படமும் எடுத்திருக்கிறேன். அதைப்பற்றிய அறிவிப்பு விரைவில் வரும்.
இன்றைய காலகட்டத்தில் இஸ்லாம் மதத்தை தீவிரவாத மதமாக கட்டமைத்து வருகின்றனர். இன்றைக்கு புதிதாக திரைத்துறைக்கு வருபவர்கள் தங்கள் படங்களில் சாதி அடையாளங்களை தான் முன்னிறுத்துகிறார்கள். இது மோசமான விஷயமாக இருக்கிறது. இந்தப்படம் அனைத்து மதங்களுக்கும் இடையே இருக்கும் அழகான உறவை தான் சொல்லப் போகிறது. நீங்கள் பார்க்காத புதிய விஷயங்கள் எதையும் நான் சொல்லப்போவதில்லை. நீங்கள் பார்த்த நினைவுகளை தான் இந்தப்படம் சொல்லும். ஓட்டுக்காக எங்களுக்குள் பகைமையை உண்டாக்காதீர்கள் என்பதை இந்தப்படம் அழுத்தமாகச் சொல்லும்.
இவ்வாறு அமீர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT