Published : 12 Feb 2022 09:34 PM
Last Updated : 12 Feb 2022 09:34 PM
சசிகுமார் நடித்து வரும் ‘காமன் மேன்’ படத்தின் டைட்டிலுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
சசிகுமார் நடிப்பில் இயக்குநர் சத்யசிவா இயக்கி வரும் படம் நடிகர் 'காமன் மேன்'. இப்படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்புக்கான காப்புரிமை தங்களிடம்தான் உள்ளது என்று ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் புகாரளித்தது.
இயக்குநர் சுசீந்திரனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் சார்பில் 2018ஆம் ஆண்டே ‘காமன் மேன்’ என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட சேம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகவும் ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் ‘காமன் மேன்’ என்கிற தலைப்பில் படம் அறிவிக்கவும் ஏஜிஆர் நிறுவனம் படக்குழுவினரை அணுகி இது தொடர்பாக பேசியுள்ளது. அவர்கள் எதுவானாலும் சேம்பரில் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.
அதன் பின்னர் இது தொடர்பாக ஏஜிஆர் நிறுவனம் சேம்பரை அணுகியுள்ளனர். தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டும், பதில் வர தாமதமான நிலையில், ‘காமன் மேன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுவிட்டது.
இதன் பிறகு ஏஜிஆர் நிறுவனம் சேம்பரை மீண்டும் அணுகவே, சேம்பருக்கு தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து எந்தவிதமான முறையான பதிலும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஏஜிஆர் நிறுவனம்‘காமன் மேன்’ என்ற தலைப்பு தங்களுக்கே சொந்தம் எனவும், இந்தத் தலைப்பில் தங்களை தவிர வேற எந்த நிறுவனத்தின் படத்துக்கும் அனுமதிச் சான்று வழங்கக் கூடாது என்றும் தணிக்கை வாரியத்துக்கு சட்ட ரீதியான நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து தணிக்கை வாரியம் ‘காமன் மேன்’ தலைப்பை ஏஜிஆர் நிறுவனத்திடம் முறையாக கொடுத்துள்ளது. இதனால் சசிகுமார் படத்தின் தலைப்பு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT