Published : 12 Feb 2022 11:34 AM
Last Updated : 12 Feb 2022 11:34 AM

கற்பூர பொம்மை ஒன்று... சர்ஜரியின்போது பாடிய பெண்ணை நேரில் சந்தித்த இளையராஜா - ஓர் உன்னத தருணமும் பின்புலமும்

கர்நாடக சங்கீத ஆசிரியரான சீதாலட்சுமி தனது அறுவை சிகிச்சையின்போது, மனப்பதற்றத்தை தவிர்ப்பதற்காக ’கற்பூர பொம்பை ஒன்று’ பாடலைப் பாடியிருக்கிறார். அவரை இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சந்தித்தது நெகிழ்ச்சியாத தருணமாக அமைந்தது.

சீதாலட்சுமி ஒரு கர்நாடக சங்கீத ஆசிரியை. இவர் இளையராஜாவின் தீவிர ரசிகை. இவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவருடைய உடல்நிலை, மயக்க மருந்தை ஏற்றுக் கொள்ளும் அளவில் இல்லை. அதனால் மருத்துவர்கள் அவருக்கு லோக்கல் அனஸ்தீஸியா எனப்படும் குறிப்பிட்ட இடம் மட்டுமே மரத்துப்போகும்படியான மயக்க மருந்தை கொடுத்தனர். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவர் பதற்ற நிலையில் இருந்ததால் மருத்துவர்கள் அவரை பாடல் பாடி ஆசுவாசப்படுமாறு கூறினர்.

சீதாலட்சுமி உடனே தனக்கு மிகவும் பிடித்தமான 'கேளடி கண்மணி' படத்திலிருந்து 'கற்பூர பொம்மை ஒன்று பாடலைப் பாடியுள்ளார். அவருக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்தமான பாடலாம். தனது குழந்தைகளுக்கு எப்போதும் அவர் அந்தப் பாடலைத்தான் தாலாட்டுப் பாடலாக பாடி வளர்த்துள்ளார்.

இசை ஆசிரியையான சீதாலட்சுமி தான் சுவாசிக்க சிரமப்பட்டபோதெல்லாம் அந்தப் பாடலைப் பாடி நுரையீரலுக்கு பயிற்சி கொடுப்பது வழக்கமாம். அந்தப் பாடலின் பல்லவியில் வரும் ஒரு வரியை நுரையீரலின் செயல்பாடு சீராக இருந்தால் மட்டுமே பாட இயலுமாம். அதனாலேயே எப்போதும் சீதாலட்சுமி தனது சுவாசப் பயிற்சிக்காக அந்தப் பாடலைப் பாடுவாராம்.

அறுவை சிகிச்சையின்போதும் மருத்துவர்கள் பாட ஊக்கப்படுத்தியவுடன் அவர் நினைவில் வந்தது ’கற்பூர பொம்மை’ என்ற பாடல்தான். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அறுவை சிகிச்சையை மேற்கொண்ட அப்பல்லோ மருத்துவமனை சீதாலட்சுமியைப் பற்றி இசைஞானி இளையராஜாவிடம் கூறி அவரை சந்திக்க நேரம் பெற்றனர்.

பின்னர் அந்த நாள் வந்தது. சீதாலட்சுமி தான் நேசித்து சுவாசிக்கும் பாடல்களை உருவாக்கிய இளையராஜாவை சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது அப்போலா மருத்துவர்களும் உடன் இருந்தனர்.

அந்த நெகிழ்ச்சித் தருணம் பற்றி சீதாலட்சுமி கூறும்போது, ”நான் இளையராஜாவின் தீவிர ரசிகை. பல மெல்லிசை மேடைக் கச்சேரிகளில் அவருடைய பாடல்களை நான் பாடியுள்ளேன். ஒருநாள் நான் அவரை நேரில் சந்திப்பேன் என்று நினைத்தது இல்லை. இப்போதுகூட என்னால் நம்பமுடியவில்லை. என்னை சந்திக்க அவர் நேரம் ஒதுக்கி அன்பை வெளிப்படுத்தியுள்ளார்” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x