Published : 07 Feb 2022 11:23 AM
Last Updated : 07 Feb 2022 11:23 AM
பிரபல தெலுங்கு இலக்கியவாதியும் ஆன்மிகச் சொற்பொழிவாளருமான கரிகாபதி நரசிம்ம ராவ் ‘புஷ்பா’ படத்தை சரமாரியாக விளாசியுள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது.
ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்தனர். சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படம் வெளியாகி இரண்டே நாட்களில், உலக அளவிலான பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.100 கோடி வசூலைக் குவித்தது.
கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து ‘புஷ்பா’ முதல் நாளில் ரூ.45 கோடி வசூலித்தது. படம் வெளியாகி 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்நிலையில் பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல தெலுங்கு இலக்கியவாதியும் ஆன்மிகச் சொற்பொழிவாளருமான கரிகாபதி நரசிம்ம ராவ் சமீபத்தில் தொலைகாட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் ‘புஷ்பா’ படத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
‘புஷ்பா’ போன்ற படங்கள் சமூகத்தில் நடக்கும் பல அக்கிரமங்களுக்கு முக்கியக் காரணம். அப்படம் ஒரு மோசமான முன்னுதாரணத்தை விதைக்கிறது. ஒரு கடத்தல்காரனை அப்படம் ஹீரோவாக முன்னிறுத்துகிறது. படத்தில் யாரையாவது ஒருவரை அடித்து வீழ்த்தும்போதெல்லாம் அவர் ‘நான் யாருக்கும் அடங்காதாவன்’ என்று கூறுகிறார். ரசிகர்களும் அவரை மாஸ் ஹீரோ எனக் கொண்டாடுகிறார்கள். யாராவது ஒருவர் ரோட்டில் போகும் ஒருவரை அடித்துவிட்டு அப்படிச் சொன்னால் இப்படத்தின் இயக்குநரோ அல்லது ஹீரோவோ அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வார்களா? இப்படம் மட்டுமல்ல பொழுதுபோக்கு என்ற பெயரில் பல படங்கள் இந்த முட்டாள்த்தனத்தை செய்கின்றன.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT