Published : 06 Feb 2022 04:06 PM
Last Updated : 06 Feb 2022 04:06 PM

நீயின்றி ஏது வசந்தம் இங்கே... - இளையராஜா இசையில் தமிழ் ரசிகர்களை தாலாட்டிய லதா மங்கேஷ்கர்!

இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர், பல்வேறு இந்திய மொழிகளில் பாடல்களை பாடியிருந்தாலும், தமிழிலும் அவர் அற்புதமான பாடல்களை பாடியிருக்கிறார். அந்த பாடல்கள் 80-களின் பிற்பகுதியில் இளைமைப் பருவத்தைக் கடந்தவர்களின் நினைவில் இருந்து இன்று வரை நீங்காமல் இருந்து வருகின்றன.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் குரலின் அளவற்ற அன்பு இருப்பதை அவரே தனது பல்வேறு பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். 1980-90 களில் தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் தன்னிகரற்ற தனது இசையால் இசை ராஜாங்கம் நடத்தி வந்த இளையராஜாவின் இசையில், மறைந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் மற்றும் சகோதரி ஆஷா போன்ஸ்லே இருவரும் அவ்வப்போது சில பாடல்களை பாடியுள்ளனர்.

அந்த வகையில், 1987-ம் ஆண்டு, இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில், பிரபு, ராதா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆனந்த். இந்த திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில், கங்கை அமரன் எழுதிய " ஆராரோ ஆராரோ... நீ வேறோ நான் வேறோ" பாடலை லதா மங்கேஷ்கர் பாடியிருப்பார். பொதுவாக பிற மொழி பாடகர்கள் தமிழில் பாடும் போது, தமிழ் எழுத்துக்களை உச்சரிக்க சிரமப்படுவர். அதனை தவிர்க்கும் வகையில், இந்த பாடலின் பல்லவியை, " ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ, தாயாய் மாறி நான் பாட, சேய் போல் நீயும் கண் மூட,
ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ" என்று எழுதியிருப்பார் கங்கை அமரன்.

அதே போல் இந்த பாடலின் சரணங்களும், லதா மங்கேஷ்கர் எளிமையாக பாடும் வகையில் எழுதப்பட்டிருக்கும். அந்த பாடலின் முதல் சரணத்தில் வரும் முதல் இரண்டு வரிகள், தென்றல் வந்து சேர்ந்ததென்ன, கண்ணன் உன்னை பார்ததென்ன, இப்படி எதுகை மோனை வடிவில் எழுதப்பட்டிருக்கும். அதன் பின்னர் வரக்கூடி வரிகளை, மஞ்சத்தில் கொஞ்சத்தான், மங்கை தான் கெஞ்சத்தான் என்றும், அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன் தான், அன்னத்தை எண்ணம் போல் வாழவைத்தான் என முடித்திருப்பார். இப்படி ஓரே ஓசையுடைய வெவ்வேறு வார்த்தைகளை எழுதி, அதனை இசைக்குயிலின் குரலில் கேட்பது ஆனந்தமாகத் தானே இருந்திருக்கும்.

இதேபோன்று, 1988-ம் ஆண்டு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிந்த திரைப்படம் சத்யா. இந்த திரைப்படத்தில் லதா மங்கேஷ்கர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடிய " வளையோசை" பாடல் இன்றைய 2K கிடஸ்களின் பிளே லிஸ்டில் கூட காணமுடியும். அந்த அளவுக்கு இந்த பாடல் மிகவும் பிரபலம். இசை கச்சேரிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எங்கு பார்த்தாலும் இந்தப் பாடல் மீண்டும் மீண்டும் இன்று வரை பாடப்பட்டு வருகிறது.

இந்த பாடல் குறித்து, இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இளையராஜா , பாடலை லதா மங்கேஷ்கர் சிரமமின்றி பாடுவதற்கு ஏதுவாக கவிஞர் வாலியிடம் சொல்லி இரட்டை கிளவி நடையில் பாடலை எழுதச் சொன்னதாக கூறியிருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட கவிஞர் வாலி, பாடலின் பல்லவியை, " வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது| குளு குளு தென்றல் காற்றும் வீசுது, சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது | எங்கும் தேகம் கூசுது, சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம், கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்" என்று எழுதியிருப்பார்.

அதே போல, இதே ஆண்டு இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படம் என் ஜீவன் பாடுது. இந்த பாடத்தில் வரும் " எங்கிருந்தோ அழைக்கும்" அக்காலத்தைய இளம் வயதினரின் காதல் சோக பாடல்களில் முதன்மையான இடம்பிடித்திருந்தது. இந்த பாடலை லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடகர் மனோவும் பாடியிருப்பார். இளையராஜா எழுதிய இந்த பாடலிலும் கூட லதா மங்கேஷ்கருக்கு சிரமமாக இருக்கக்கூடாது என்பதற்காக வார்த்தை உபயோகத்தில் அதே உக்தி கையாளப்பட்டிருக்கும். குறிப்பாக இந்த பாடலின் தொடக்கத்தில் வரும் இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் ஹம்மிங் அத்தனை சிறப்பாக இருக்கும். பாடலின் பல்லவி "எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்,
என்னுயிரில் கலந்தே அது பாடும், சேர்ந்திடவே உன்னையே ஓஹோ, ஏங்கிடுதே மனமே" என எழுதப்பட்டிருக்கும்.

பாடலின் சரணத்தில், "வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள்சொன்னாலும், தென்றலும் இங்கே வந்து நின்று இன்பத்தின் கீதம் தந்தாலும், நீ இன்றி ஏது வசந்தம் இங்கே, நீ இன்றி ஏது ஜீவன் இங்கே, சேர்ந்திடவே உன்னையே என முடித்திருப்பார். உண்மைதான், இசைக்குயில் லதா மங்கேஷ்கர் இன்றி ஏது வசந்தம் இங்கே, நீயின்றி ஏது ஜீவன் இங்கே என கண்ணீருடன் கலங்கி நிற்கிறது, இந்திய இசை உலகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x