Published : 05 Feb 2022 10:32 AM
Last Updated : 05 Feb 2022 10:32 AM

முதல் பார்வை : வீரமே வாகை சூடும் | மனதில் வீரமிருந்தால் பார்க்கலாம்!

’வீரமே வாகை சூடும்’... விறுவிறு ஆக்‌ஷன், புல்லரிக்கும் வசனங்கள் என ட்ரெய்லரில் இருந்த ஹைப் முழுப் படமாக பார்க்கும்போது இருந்ததா? - இதோ இன்னொரு ’வழக்கம்போல்’ சினிமாவின் முதல் பார்வை...

போலீஸ் எஸ்.ஐ ஆக முயற்சி செய்துகொண்டிருக்கும் இளைஞர் போரஸ் (விஷால்). அவரது அப்பாவும் (மாரிமுத்து) ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் விஷாலில் தங்கை துவாரகாவை (ரவீனா ரவி) அவர்களது ஏரியாவில் இருக்கும் லோக்கல் ரவுடி ஒருவரின் தம்பி ஒருதலையாகக் காதலித்து டார்ச்சர் செய்கிறார். இன்னொரு பக்கம் முதலைப் பண்ணையில் வேலை செய்யும் ஜார்ஜ் மரியனின் மகள் திவ்யா (தீப்தி) கல்லூரியில் படிக்கிறார். அவரது கல்லூரியில் படிக்கும் பணக்கார மாணவன் ஒருவன் அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கிறான். மூன்றாவதாக தனது கிராமத்தின் வளங்களை சுரண்டி மாசுப்படுத்தும் தொழிற்சாலைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் பரிசுத்தம் (குமரவேல்). அவரை ஒழித்துக் கட்ட காத்திருக்கும் கார்ப்பரேட் வில்லன் (பாபுராஜ்). இந்த மூன்றுக் கதைகளும் ஒரு புள்ளியில் இணையும்போது வில்லன்களுக்கு பொதுவான எதிரியாகிறார் விஷால். அதன்பிறகு என்னவானது? வில்லன்களை வென்று நாயகன் வாகை சூடினாரா என்பதே ‘வீரமே வாகை சூடும்’ சொல்லும் கதையும் திரைக்கதையும்.

ஒரு சராசரி மனிதன் அதிகாரத்துக்கு எதிராக வெகுண்டெழுவதே கதை. ஆதி காலம் தொட்டு அனைத்து மொழி சினிமாக்களிலும் இதுவரை பார்த்து சலித்த கதை என்றாலும் அதை எந்தவித நுணுக்கங்களோ ஆய்வுகளோ இன்றி மனம்போன போக்கில் திரைக்கதை அமைத்து படமாக கொடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் து பா சரவணன்.

மூன்று வெவ்வேறு கதைகளை எடுத்துக் கொண்டு அவை மூன்றும் ஒற்றைப் புள்ளியில் இணையும்படியான திரைக்கதை. ஆனால் மூன்று கதைகளுமே பார்ப்பவர்களுக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டிருக்கிறது. சமீபகாலமாக தமிழில் வெளியாகும் பெரும்பாலான கமர்ஷியல் படங்களைப் போலவே படம் தொடங்கி அரை மணி நேரம் சம்பந்தமே இல்லாத காட்சிகள்தான். படம் தொடங்கியவுடன் ஒரு பெரிய வில்லன் கும்பல் ஹீரோவைக் கொல்வதற்காக சென்று கொண்டிருக்கிறது. அப்போது தொடங்கும் பில்டப்புகள், படம் முழுக்க நிரம்பி வழிகின்றன. ஹீரோவைத் தவிர படத்தில் போவோர் வருவோர் எல்லாம் ‘ஒருத்தன் வருவாண்டா’ என்கிற ரீதியில் ஹீரோவுக்கு பில்டப் கொடுத்துச் செல்கிறார்கள்.

நாயகனாக விஷால். இதற்கு முந்தைய படங்களில் எதைச் செய்தாரோ, அதையே இப்படத்திலும் தவறாமல் செய்கிறார். நாயகனின் அம்மாவாக துளசி. வழக்கமான தமிழ் சினிமாவில் அம்மாவாக நடிப்பவருக்கு என்ன வேலையே அதை தவறாமல் செய்கிறார். தங்கையாக வரும் ரவீனா ரவி ஆதிகாலம் தொட்டு தமிழ் சினிமாவில் தங்கை கதாபாத்திரங்கள் என்ன செய்யுமோ அதையே இவரது கதாபாத்திரமும் செய்கிறது. வழக்கம்போல தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு என்ன வேலையோ அதை நாயகி டிம்பள் ஹயாதி செவ்வனே செய்கிறார். வழக்கம்போல வேலை வெட்டி எதுவும் இல்லாமல் ஹீரோவுக்கு உதவுவதையே முழு நேரத் தொழிலாக செய்து கொண்டிருக்கும் நண்பனாக யோகி பாபு. வழக்கம் போல கார்ப்பரேட் வில்லன் பாபுராஜ் படத்தில் ஒரு 640 கொலைகளை செய்கிறார். இப்படி படம் முழுக்க பல ‘வழக்கம் போல’ அம்சங்கள்.

படத்தில் விஷாலின் தங்கைக்கு லவ் பண்ண சொல்லி ஹராஸ்மென்ட் செய்கிறார் லோக்கல் ரவுடியில் தம்பி. ஆனால் படத்தில் காமெடியனாக சொல்லப்படும் யோகிபாபுவும் பார்க்கும் பெண்களுக்கு எல்லாம் லவ் லெட்டர் கொடுத்து அதே வேலையைத்தான் செய்கிறார். நாயகியின் அறிமுகக் காட்சியில் அவரிடம் வழியும் வங்கி மேனேஜரை திட்டி அசிங்கப்படுத்தி விட்டு வரும் நாயகி தன் தோழியிடம் ‘அவங்க நம்மல கும்பிடுறதும் கூப்பிடுறதும் நம்ம கையில தான் இருக்கு’ என்று பார்ப்பவர்களுக்கு ’புல்லரிக்கும்’ வகையில் பேசுகிறார். ஆனால் இந்த கூஸ்பம்ப் மொமென்ட்டுகள் படத்தில் வரும் மற்ற பெண் கதாபாத்திரங்களிடையே காணாமல் போய்விடுகிறது.

நாயகியை பெண் பார்க்க வேறொரு குடும்பத்தினர் வந்திருக்கும்போது விஷால் நேராக பெண்ணின் பெட்ரூமுக்குப் போய் கதவை அடைத்துக் கொள்கிறார். உள்ளே இருவரும் ஏதேதோ சத்தம் கொடுப்பதைக் கேட்கும் மாப்பிள்ளை வீட்டார் கோபமாக கிளம்பிச் சென்றுவிடுகின்றனர். ரூமிலிருந்து வெளியே வரும் நாயகன், நாயகியின் தந்தையை மிரட்டி விட்டுச் செல்கிறார். இப்படி ஒரு கொச்சையாக எழுதப்பட்ட காட்சியை இதுவரை தமிழ் சினிமா கண்டதில்லை. அதற்கு சப்பைக்கட்டு கட்ட இன்னொரு காட்சியில் நாயகனும் நாயகியும் உள்ளே எதுவுமே செய்யவில்லை, செல்போன் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள் என்று காட்டப்படுகிறது. நாயகன் ரொம்ப நல்லவர் என்று காட்டுவதற்காக இந்த காட்சி. பார்ப்பவர்கள் தலையில் அடித்துக் கொள்ளாத குறைதான்.

படத்தின் இரண்டாம் பாதியில் நாயகன் தன்னை நூல் பிடித்து வந்துவிடக் கூடாது என்பதற்காக கார்ப்பரேட் வில்லன் பாபுராஜ் முன்பே சொன்னதப் போல ஒரு 700 கொலைகளை செய்கிறார். அவ்வளவு ஆள் பலம், பணபலம் படைத்த ஒருவர் சாதாரண ஆளான விஷாலை எளிதாக கொன்றிருக்கலாமே. எதற்கு யூ-டர்ன் செய்து, டேபிளை உடைத்து, மூக்கை பஞ்சராக்கி, ஏன் இந்த ரத்த வெறி?

தங்கையின் தொலைந்து போன செல்போனை ஹேக் செய்வதற்காக விஷால் ஒரு ஹேக்கரை தேடிச் செல்கிறார். தனது பாட்டி இறந்திருப்பதால் மறுநாள் ஹேக் செய்து தருவதாக உறுதியளிக்கிறார் அந்த ஹேக்கர். அடுத்த சில நிமிடங்கள் கழித்து ஒரு மருத்துவமனையில் விஷால் அமர்ந்திருக்கும்போது ஹேக்கர் ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கரில் தங்கை பேசிய ஆடியோவை சத்தமாக ஒலிக்க விட்டுக் கொண்டே வருகிறார். அந்த ஆடியோவை விஷாலை அவருக்குத் தெரியாமல் பின் தொடரும் அடியாள் ஒருவனது செல்போன் மூலமாக வில்லன் எங்கிருந்தோ கேட்கிறார். முதலில் விஷால் இருக்குமிடம் ஹேக்கருக்கு எப்படி தெரியும்? அப்படியே தெரிந்தாலும் விஷால் அந்த ஆடியோவைத்தான் தேடுகிறார் என்பது அவருக்கு எப்படி தெரிந்தது. அதையும் எப்படியோ தெரிந்து கொண்டாரென்றே வைத்துக் கொள்வோம். எதற்காக அதை சத்தமாக அதிலும் மெனக்கெட்டு ப்ளூடூத் ஸ்பீக்கரில் கனெக்ட் செய்து ஒலிக்கவிட்டுக் கொண்டே வரவேண்டும். அதையும் சகித்துக் கொள்வோம் என்று வைத்துக் கொண்டால் கூட அந்த ஸ்பீக்கரில் வரும் சத்தத்தை அவ்வளவு துல்லியமாக தூரத்தில் நின்று கொண்டிருக்கும் அடியாளின் போன் மூலமாக வில்லனால் எப்படி கேட்க முடிந்தது? உஸ்ஸ்ஸ்... சத்தியமாக முடியவில்லை.

யுவனின் விறுவிறுப்பான பிண்ணனி இசையும், கவின் ராஜின் ஒளிப்பதிவு, அதற்கேற்ற லைட்டிங் ஆகியவை படத்துக்கு பலம். ஆனால் இவை எவற்றாலும் படத்தை காப்பாற்ற முடியவில்லை. ட்ரெய்லரில் இருந்த மயிர்க்கூச்செரியச் செய்யும் வசனங்கள் படத்தில் கடமைக்கு சொருக்கப்பட்டிருக்கின்றன.

ட்ரெய்லரில் இருந்த விறுவிறுப்பில் கால் பங்கு படத்தில் இருந்திருந்தால் கூட படம் ஒரு ஆவரேஜான படமாக இருந்திருக்கும். மனதில் வீரமும், துணிச்சலும் இருந்தால் தாரளமாக பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x