Published : 19 Jan 2022 01:01 PM
Last Updated : 19 Jan 2022 01:01 PM
சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்ற ‘ரமணி Vs ரமணி’ தொடரின் அடுத்த சீசன் உருவாகி வருகிறது. 'ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈகோ மோதல்கள், தலைமுறை இடைவெளிகள், இணக்கமின்மை, டீன் ஏஜ் துயரங்கள் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற பிரச்சினைகளை இந்த தொடர் நகைச்சுவை பாணியில் சொல்லும்" என்கிறார் இயக்குநர் நாகா.
1998-ஆம் ஆண்டு ராஜ் டிவியில் ஒளிபரப்பான தொடர் ‘ரமணி Vs ரமணி’. ராம்ஜி, வாசுகி ஆனந்த், தேவதர்ஷினி, பிரித்விராஜ் ஆகியோர் நடித்த இத்தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. இத்தொடரின் இரண்டாம் சீசன் 2001-ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த இத்தொடரை ‘மர்ம தேசம்’ நாகா இயக்கியிருந்தார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இத்தொடரின் மூன்றாவது சீசன் ‘ரமணி Vs ரமணி 3.0’ என்ற தலைப்பில் மீண்டும் உருவாகிறது. இதில் ராம்ஜி, வாசுகி ஆனந்த், பொன்னி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இத்தொடர் குறித்து இயக்குநர் நாகா கூறியது: "குடும்ப வாழ்க்கை என்பது ஏற்றத் தாழ்வுகள், கண்ணீர் தருணங்கள் மற்றும் மகிழ்ச்சிகள் நிறைந்தது. எந்தவொரு குடும்பத்திலும் இதுதான் அமைப்பாக இருக்கும். இந்தப் பொதுமை என்பது புவியியல் எல்லைகளை மட்டுமல்ல, இனம், மதம், சாதி அல்லது மதம் ஆகியவற்றைக் கடந்தது. மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியக் குடும்பம் சில விஷயங்களில் தனித்துவமானது. தாத்தா, பாட்டி, மகன்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் என அனைவரும் ஒரே கூரையின் கீழ் வாழும் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு வேகமாக மறைந்து வந்தாலும், ஒவ்வொருவரின் வாழ்விலும் இந்த உறவினர்கள் ஏற்படுத்தும் வலுவான தாக்கம் மற்றும் பாதிப்புகள் எப்போதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது.
அதனால் இன்றும் தனித்தனியாக வேறு வேறு இடங்களில் வாழ்ந்தாலும், கூட்டுக் குடும்ப மனநிலையில்தான் வசித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் வாழும் குடும்பங்களுக்கு, வெளி உலகத்திலிருந்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈகோ மோதல்கள், தலைமுறை இடைவெளிகள், இணக்கமின்மை, டீன் ஏஜ் துயரங்கள் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற பிரச்சினைகள் பல உள்ளன. அவற்றை இந்த தொடர் நகைச்சுவை பாணியில் சொல்லும்" என்றார் நாகா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT