Published : 12 Jan 2022 03:22 PM
Last Updated : 12 Jan 2022 03:22 PM

'சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிப்பாராக' - மன்னிப்பை ஏற்றுக்கொண்ட சாய்னா

ஆபாசமாக கருத்துப் பதிவிட்ட சர்ச்சையில் நடிகர் சித்தார்த் மன்னிப்புக்கோரிய நிலையில், அதை ஏற்றுக்கொண்ட பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் 'சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிப்பாராக' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஃபெரோஸ்ர் நகருக்குச் சென்றபோது விவசாயிகளின் போராட்டத்தால் மீண்டும் டெல்லி திரும்பினார். சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

"எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்" என்று தனது ட்வீட்டில் சாய்னா தெரிவித்திருந்தார். சாய்னாவின் இந்தப் பதிவை டேக் செய்து நடிகர் சித்தார்த், "இறகுப்பந்து உலகின் சாம்பியன்... கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர்" என்று தெரிவித்தார்.

இந்தப் பதிவை ஆபாசமான வார்த்தைகளால் அவரின் ட்விட்டரில் தெரிவித்ததை அடுத்து கண்டனங்கள் எழுந்தன. கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கி சிவசேனா ராஜ்யசபா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, தமிழ் சினிமாவின் சின்மயி, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா போன்ற பல தரப்பும் நடிகர் சித்தார்த்துக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இன்று இந்த விவகாரத்தில் சித்தார்த் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

"நான் பதிந்த முரட்டுத்தனமான நகைச்சுவைக்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் நகைச்சுவை என்று கருதி அந்த ட்வீட்டைப் பதிவிட்டிருந்தாலுமே, அது நல்ல நகைச்சுவை அல்ல. சரியான கருத்தைக் கொண்டு சேர்க்காத அந்த நகைச்சுவைக்காக வருந்துகிறேன்" என்பது போன்ற பெரிய மன்னிப்பு கடிதத்தை சித்தார்த் வெளியிட்டார்.

சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார். அவரது பதிவில் "சித்தார்த் முதலில் என்னைப் பற்றி ஏதோ கூறினார். பின்னர் மன்னிப்பு கோரினார். அவர் சொன்னது எதற்கு வைரலானது என்பது தெரியவில்லை.

அன்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனதைப் பார்த்து நானே ஆச்சரியப்பட்டேன். அவரின் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும், ஒரு பெண்ணை இதுபோன்று குறிவைத்து தாக்கக் கூடாது. சித்தார்த் உடன் நான் பேசியதில்லை. எனினும் அவர் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி. சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிப்பாராக" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x