Last Updated : 11 Jan, 2022 01:27 PM

 

Published : 11 Jan 2022 01:27 PM
Last Updated : 11 Jan 2022 01:27 PM

நான் அஜித் சாரின் செல்லப்பொண்ணு; நயன்தாராவின் பெஸ்ட் ப்ரண்ட்: நடிகை பாப்ரி கோஷ் கலகல பேட்டி

விஜய்யின் தந்தை எஸ்..சந்திரசேகர் இயக்கத்தில் 2015-ல் வெளியான `டூரிங் டாக்கீஸ்` படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை பாப்ரி கோஷ். நாயகி சீரியலில் இவரின் கண்மணி கேரக்டருக்குப் பெரிய அளவில் ரசிகர்கள் உண்டு. 'பாண்டவர் இல்லம்', 'பூவே உனக்காக', 'சித்தி 2', 'மகராசி' ஆகிய சீரியல்களில் நடித்து வரும் பெங்கால் பொண்ணு பாப்ரி கோஷிடம் பேசினோம்.

எனக்கு ரொம்பப் பிடித்தது தமிழ்தான். நான் நல்லா தமிழில் பேசுகிறேனா என்று கண்ணை உருட்டி அழகாகச் சிரித்தவரிடம் பேசினோம்.

பாப்ரி நடிகையான கதை?

எனது பூர்வீகம் கொல்கத்தா. காலேஜ் படிக்கிறப்பவே மாடலிங், விளம்பரப் படங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ‘கால்பெல்லா‘ங்கற பெங்காலி படத்துல அறிமுகமானேன். என் விளம்பரப் படங்களைப் பார்த்துட்டுதான் தமிழ்ல ‘டூரிங் டாக்கீஸ்’ வாய்ப்பு வந்துச்சு. தமிழ் இண்டஸ்ட்ரி பத்தி ஏற்கெனவே தெரியும். அதனால, ஆர்வமா அதுல கமிட் ஆனேன். அப்புறம் சொல்லும்படியான படங்கள் அமையல. ‘பைரவா’ல கூட சின்ன கேரக்டர்தான். அந்த டைம்லதான் சந்தானம் சாரோட ‘சக்கப்போடு போடுராஜா’வுக்கு கூப்பிட்டாங்க. பெரிய ரோல். ஆர்வமா போய் நடிச்சேன். ஆனா, படம் ரிலீஸ் ஆனதும் ஷாக் ஆகிட்டேன். அதுல நான் ரிஸ்க் எடுத்து நடிச்ச போர்ஷன்ல முக்கால்வாசி காணோம். தமிழ் தெரியாம, கஷ்டப்பட்டு நடிச்ச அத்தனை சீன்களும் ஸ்கிரீன்ல இல்ல. அதுல அப்செட்ல இருந்தேன். அந்த டைம்லதான், சின்னத்திரை சான்ஸ் வந்தது.

‘‘நாயகி’ சீரியல்ல வில்லி கேரக்டர்கள் இருக்கு, நடிப்பீங்களா?’ன்னு கேட்டாங்க. ‘நாயகி’ இயக்குநர் குமரன் சாரைப் போய்ப் பார்த்தேன். இப்பவாவது ஓரளவு தமிழ் பேசுறேன். அப்ப நான் தப்புத்தப்பாதான் பேசுவேன். நான் ஒன்னு சொன்னா... நீங்க ஒன்னு புரிஞ்சுப்பீங்க. அப்படித்தான் பேசுவேன். ஆடிஷன் வெச்சாங்க. தமிழ்ல சொதப்பினேன். ஆனாலும், அங்க என்னை எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. ‘தொடர்ல ரெண்டு வில்லி கேரக்டர்கள் இருக்கு. அதுல நீங்க எந்த ரோல் பண்றீங்க? டைம் எடுத்து யோசிச்சு சொன்னா போதும்’னு குமரன் சார் ஆப்ஷன் கொடுத்தார்.

இப்ப நான் நடிச்சிட்டிருக்கற ‘கண்மணி’ கேரக்டர்ல அப்ப வேறொருத்தர் நடிச்சிட்டிருந்தார். அந்தப் பொண்னு வேற சீரியலுக்கு போனதால, எதிர்பாராத விதமா அந்த ரோல் எனக்குக் கிடைச்சது. இப்ப என் நிஜப் பெயரே மறந்துடுச்சு. அந்தளவுக்கு இப்போ நான் எங்க போனாலும் எல்லாருமே என்னை ‘கண்மணி’ன்னு கூப்பிடறாங்க. சந்தோஷமா இருக்கு.

தமிழ் நல்லா பேசுறீங்களே. எப்படி கத்துக்கிட்டீங்க?

நாயகி சீரியல்ல நடிக்கும்போது அதை யூடியூப்ல அப்லோட் பண்ணுவாங்க. அதுக்கு நிறைய கமெண்ட்ஸ் வரும். அதில் கண்மணி கேரக்டர் பற்றி என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆசைப்படுவேன். கமெண்ட்ஸ்களை போட்டோ எடுத்து ப்ரண்ட்ஸுக்கு அனுப்பிவெச்சு என்னன்னு கேட்டுத் தெரிஞ்சுப்பேன். அப்படி ஒவ்வொரு எழுத்தாப் பார்த்து பார்த்து கத்துக்கிட்டேன்.

அது என்ன பாப்ரி கோஷ்?

பாப்ரினா, flower petals - ‘பூவின் இதழ்.’ ‘கோஷ்’ங்கறது எங்க ஃபேமிலி பெயர்.

நிஜத்திலும் பாப்ரி கோஷ் கண்மணி போல்தானா?

இல்ல. நான் ரொம்ப டேஞ்சர் கேரக்டர். நீங்க அன்பு காட்டினீங்கன்னா உங்களுக்கு நான் நிறைய அன்பைக் காட்டுவேன். ஆனா, அது லிமிட் தாண்டிட்டா நான் சந்திரமுகிதான்.

அஜித், விஜய் படங்களில் நடித்த அனுபவம்?

நான் அஜித் ரசிகை. அப்போ நினைச்சுப் பாருங்களேன். அஜித் படத்துல நடிக்க வாய்ப்பு எனக்கு எப்படி இருந்திருக்கும்னு. அஜித் சார் வந்து பேசினால் கேட்டுக்கிட்டே இருக்கணும்னு தோணும். அவ்வளவு இனிமையா பேசுவார். அஜித் சார்ட்ட ரொம்பப் பிடிச்சது என்னன்னா எல்லாருடைய பெயரையும் ஞாபகம் வெச்சுக்கிட்டு ஒவ்வொருத்தரையும் மரியாதையா அழைப்பார். என்னை பாப்ரி ஜி என்றுதான் கூப்பிடுவார். ஒவ்வொரு முறையும் பாப்ரி ஜி பாப்ரி ஜி என்று கூப்பிடும் போது எப்படி இருக்கும்ணு பார்த்துக்கோங்களேன்.

அதை நான் அப்படியே வந்து நாயகி சீரியல் ஷெட்டில் சொல்றப்போ அதற்கு அங்குள்ள எல்லோரும் அப்போ நாங்களும் பாப்ரி ஜின்னு கூப்பிடணுமா அப்படியெல்லாம் முடியாதுன்னு சொல்லி கலாய்ப்பாங்க.

சர்கார்’ல நல்ல ரோல் பண்ணேன். ‘பைரவா’ டைம்ல விஜய் சார்கிட்ட அவ்வளவா பேசினதில்ல. பேஸிக்கா நான் லொடலொட டைப். விஜய் சார் ரொம்ப சைலன்ட். இப்படி எதிர் எதிர் குணாம்சங்கள் கொண்ட நாங்க ‘சர்கார்’ல நிறைய பேசினோம். ஜோக் சொல்லி சிரிக்க வெச்சிட்டே இருப்பார் விஜய் சார்.

ஷூட்டிங் ஸ்பாட் கலாட்டா?

ஷூட்டிங் ஃப்ரீ டைம்ல என்ன பண்ணலாம்னு சொல்லிட்டு கேம் விளையாடுவோம். அப்பப்போ அது என்ன ஆகும்னா கேம்தான் முக்கியம்னு நான் பாட்டுக்கு விளையாடிட்டு இருப்பேன். கடைசியில கேம்தான் முக்கியம்னு ஆகிப்போய் ஷூட்டுக்கு கூப்பிடும்போது ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் இதை முடிச்சிட்டு வந்திடுறேன்னு நான் மட்டும் சொல்லுவேன். விளையாட்டுக்கு நடுவில்தான் ஷூட்டிங் போனேன். நான் அஜித் சாருக்கு கிட்டத்தட்ட செல்லப்பொண்ணு. நான் ஒரு கேம்ல ஜெயிக்கவும் வாவ் பாப்ரி ஜின்னு சொல்லி சந்தோஷப்பட்டார்.

அதைப் பார்த்து தம்பி ராமையாவும், ரோபோ ஷங்கரும் என்ன உனக்கு மட்டும் இவ்ளோ செல்லமான்னு கிண்டல் பண்ணாங்க. இப்போ நினைச்சாலும் எனக்கு அது பெருமைதான்.

நயன்தாராவின் தோழமை?

ஷூட்டிங் ஸ்பாட்ல நயன்தாரா மேம் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. ஒரு நாள் நான் கொஞ்சம் லேட்டா வந்தேன். அவ்ளோதான் என்னைப் பார்த்து அப்படி ஒரு கத்து. ஏய் பாப்ரி என்ன இவ்வளோ லேட்டா வர்ற. நான் நடுங்கிப் போய்ட்டேன். அதற்கடுத்தாப்ல சொன்னாங்க பாருங்க அதுதான் ஹைலைட். இப்படி நீ லேட்டா வந்தா எப்படி நாம விளையாட முடியும். வா விளையாடலாம் என்றார். அப்பாடா அப்பதான் எனக்கு உயிரே வந்தது. அந்த அளவுக்கு நட்புக்கு இனிமையானவர். அவ்ளோ உயரத்தில் இருந்தாலும் எந்த தலைக்கனமும் இல்லாமல் பழகும் குணம்தான் நயன்தாரா ஸ்பெஷல்.

முக்கியமாக அம்பிகா மேம் பற்றி சொல்லணும். ஷூட்டிங் நடக்குறப்போ சிரிப்பு காட்டிட்டு கண்டுக்காம நின்னுப்பாங்க. சிரிச்சு நான் மாட்டிக்கிட்டு திட்டு வாங்குவேன். ஒரு பெரிய நடிகை என்ற அலட்டல் அவரிடம் கொஞ்சம் கூட கிடையாது. அப்படி நடந்துக்கவே ஒரு பெரிய மனசு வேணும்.

குடும்பத்தை எப்படி சமாளிக்கிறீங்க?

நான் எங்க சமாளிக்கிறேன். அவங்கதான் என்னை சமாளிக்கிறாங்க. ரொம்ப கஷ்டம்ங்க.

என்ன இப்படி சொல்லிட்டீங்க?

காதல்ல ரொம்ப உண்மையா இருக்கணும். ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்கணும். நீங்க எது பண்ணினாலும் உங்களைச் சார்ந்தவரிடம் சொல்லிடணும். கோபம், அன்பு, பாசம் எல்லாமே லிமிட்லதான் இருக்கணும். அந்த லெவலைத் தாண்டிட்டா அவ்ளோதான். எனக்கு காதல் செட் ஆகாது. ஸ்கிரீன்ல லவ் பண்ணணும்னு சொன்னா ஒரு சுவர்கிட்டக்கூடப் பேசி லவ் பண்ணுவேன். ஆனா நிஜத்துல லவ் பண்றது எல்லாம் நமக்கு ரொம்ப கஷ்டம். அதான் நான் வீட்ல பார்த்த மாப்பிள்ளையக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
என் கணவரைப் பத்தி சொல்லணும்னா ரொம்ப ரொம்ப நல்லவர். ஆனா, அவர் அவ்ளோ நல்லவரா இருக்குறதுதான் கெட்ட விஷயம். எப்படி நம்ம பன்ச் என்று சொல்லிப் புன்னகைக்கிறார் கண்மணி.... இல்லையில்லை பாப்ரி கோஷ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x