Published : 06 Jan 2022 01:10 PM
Last Updated : 06 Jan 2022 01:10 PM
தீவிரவாத நடவடிக்கைகளின் மையமாக பஞ்சாப் மாறிக் கொண்டிருக்கிறது என நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி விமானம் மூலம் பஞ்சாப் சென்றார். மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் செல்ல முடிவு செய்தார்.
ஆனால், விவசாயிகள் போராட்டம் காரணமாக அவரது வாகன அணிவகுப்பு மேம்பாலத்தில் 15 நிமிடத்துக்கும் மேலாக நின்றது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தனது பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பலரும் இந்த விவகாரம் தொடர்பாக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ள அவர், “பஞ்சாப்பில் நடந்தது அவமானகரமானது; பிரதமர் என்பவர் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர்/ பிரதிநிதி/ 160 கோடி மக்களின் குரல். அவர் மீதான தாக்குதல் என்பது ஒவ்வொரு இந்தியரின் மீதான் தாக்குதல், ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும் கூட. பஞ்சாப் தீவிரவாத நடவடிக்கைகளின் மையமாக மாறிக் கொண்டிருக்கிறது. அவர்களை நாம் இப்போது தடுக்கவில்லை என்றால் தேசம் ஒரு மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்” என்று கங்கணா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT