Published : 05 Jan 2022 01:39 PM
Last Updated : 05 Jan 2022 01:39 PM
மும்பையில் நடந்துவரும் ‘டைகர் 3’ படப்பிடிப்பு தளத்தில் சல்மான் கான் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சல்மான் கான், கேத்ரீனா கைஃப் நடிப்பில் 'ஏக் தா டைகர்' திரைப்படத்தின் மூன்றாம் பாகமான 'டைகர் 3', கடந்த வருடம் மார்ச் மாதம் படப்பிடிப்புடன் துவங்கவிருந்தது. ஆனால் அப்போது நாயகி கேத்ரீனாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் மகாராஷ்டிர அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியதால் படப்பிடிப்பு மொத்தமாகத் தடைபட்டது.
அதன் பிறகு கரோனா பரவல் குறைந்தவுடன் மீண்டும் ‘டைகர் 3’ படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மகாராஷ்டிராவில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு நடிகர் சல்மான் கான் படப்பிடிப்புத் தளத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் தேவைப்படும் ஆட்களை தவிர மற்றவர்கள் இருக்க கூடாது எனவும் தயாரிப்பு நிர்வாகத்திடம் சல்மான் கான் கூறியுள்ளதாக தெரிகிறது.
மேலும், தற்போது இம்ரான் ஹாஷ்மி, சல்மான் கான் தொடர்பான சண்டை காட்சிகளுக்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருவதால், அதற்கு அதிகளவிலான பணியாளர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தடுப்பூசி போட்டவர்களை மட்டும் அனுமதிப்பது, தனிமனித இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட விஷயங்களில் சல்மான் கான் கடும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT