Published : 02 Jan 2022 01:20 PM
Last Updated : 02 Jan 2022 01:20 PM
சென்னை: கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வந்துள்ள நடிகர் வடிவேலு, பாதுகாக்காப்பாக இருங்க 2022 அனைவருக்கும் நல்லாயிருக்கும் என்று புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் பணிக்காக, படக்குழுவினருடன் வடிவேலு லண்டன் சென்றிருந்தார். கடந்த மாதம் 23-ஆம் தேதி சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சைக்கு பிறகு, முழுமையாக குணமடைந்த வடிவேலு நேற்று (ஜனவரி 1) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆனால், வடிவேலுவுக்கு ஏற்பட்டிருப்பது ஒமைக்ரான் தொற்று பாதிப்பா, இல்லையா என்பதை கண்டறிய அனுப்பப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் மருத்துவர் சுகாஷ் பிரபாகர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நடிகர் வடிவேலு பூரணகுணமடைந்துள்ளார். அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பாக இருக்கவேண்டும்: இந்நிலையில் சிகிச்சைப் பெற்று பூரண குணமடைந்த வடிவேலு தற்போது சில தினங்களுக்கு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளார். வீட்டிலிருந்தபடி தொலைபேசி வாயிலாக அவர் அளித்த பேட்டியொன்றில் கூறுகையில், ''நான் ரொம்ப நல்லாருக்கேன். எல்லாருக்கும் 2022 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆங்கில புத்தாண்டில் எல்லாரும் நல்லா இருக்கணும். எல்லாருக்கும் என்னுடைய அன்பார்ந்த வேண்டுகோள், தயவுசெய்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு அனைவருக்கும் நன்றாக இருக்கும். மக்களும் இறைவனும் ஒன்று. மக்கள்தான் இறைவன். இறைவன்தான் மக்கள். நமது மக்கள் என்மேல எவ்வளவு பாசம் வைத்திருக்கிறாரர்கள் என்று நினைத்து நினைத்து கண்ணீர் விட்டு அழுதுள்ளேன். அவர்களுடைய அந்த வேண்டுதலிலேயே என் உடல்நிலை சரியாகிவிட்டது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT