Published : 31 Dec 2021 12:14 PM
Last Updated : 31 Dec 2021 12:14 PM
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இதோ அதோ என்று நீண்டநாட்களாக ரசிகர்களை காக்க வைத்த ‘வலிமை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. எப்படி இருக்கிறது ட்ரெய்லர் - இதோ ஒரு விரைவுப் பார்வை...
ட்ரெயல்ர் தொடங்கும்போதே மேக்கிங் வீடியோவில் பெரிதும் பேசப்பட்ட அந்த பஸ் சேஸிங் காட்சியுடன் தொடங்குகிறது. படத்தில் மதுரை ஒரு பிரதான இடம் வகிக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. அடுத்ததாக அஜித்தின் அறிமுகம். “10 வருஷமா தேடிக்கிட்டு இருந்த ‘கேங்’கை எப்டிய்யா பத்தே நாள்ல பிடிச்சாரு?” என்ற குரல் பின்னணியில் ஒலிக்க கேங் அடியாட்களை வம்சம் செய்தபடி ரகளையாக அறிமுகமாகிறார் அஜித்.
“வறுமையில் பண்ணிட்டேன் சார்” என கைதி ஒருவர் சொல்ல, அதற்கு அஜித் “ஏழையாக இருந்து உழைச்சு சாப்பிடுற எல்லாரையும் கேவலப்படுத்தாத” பதிலளிக்கிறார். அடுத்த காட்சியில் என்கவுன்ட்டர் குறித்து ‘உயிரை எடுக்குற உரிமை நமக்கில்ல சார்’ என்பன போன்ற ஆழமான - சமூகப் பார்வையுள்ள வசனங்களும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன.
மதுரையிலிருந்த் சென்னைக்கு ஒரு தற்கொலை குறித்து விசாரிக்க வருகிறார் அஜித். ஆனால், அந்த தற்கொலையில் தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறுகிறார். அடுத்ததாக வில்லன் என்ட்ரி. “வலிமை இருக்குறவன் அவனுக்கு என்ன வேணுமோ அதை எடுத்துப்பான்” என்றபடி அறிமுகமாகிறார் வில்லன் கார்த்திகேயா.
அதன்பிறகு ட்ரெய்லரில் வரும் காட்சிகள் இது ஒரு பரபர கேட் அண்ட் மவுஸ் வகை படம் என்பதை உறுதியளிக்கின்றன. வியக்க வைக்கும் பைக் சாகசங்கள், விறுவிறு சேஸிங் என படத்தில் கூஸ்பம்ப்ஸ் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என தோன்றுகிறது.
இதனிடையே, ட்ரெய்லரில் அம்மா சென்டிமென்ட், அஜித்தின் வேலை பறிபோவது என எமோஷனல் காட்சிகளுக்கான குறிப்புகளும் ஆங்காங்கே தென்படுகின்றன. தொடர்ந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பார்த்த அஜித் இப்படத்தின் முழு கலரிங் தலைமுடியில் படு ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். அஜித் தவிர மற்ற நடிகர்கள் யாரையும் ட்ரெய்லரில் பெரிதாக ஃபோகஸ் செய்யவில்லை. படத்தில் அவர்களுக்கான நியாயத்தை ஹெச்.வினோத் செய்திருப்பார் என்று நம்பலாம். அஜித் ரசிகர்களை ஆர்ப்பரிக்கச் செய்யும் பைக் சாகச காட்சியும் ட்ரெய்லரில் எட்டிப் பார்க்கிறது.
ட்ரெய்லரிலேயே முழுக் கதையும் இதுதான் என்று இயக்குநர் சொல்லிவிட்டதாக தோன்றுகிறது. எனினும் அதையும் தாண்டி படத்தில் பல சர்ப்ரைஸ்கள் இருக்கலாம். ட்ரெய்லர் அஜித்தின் முந்தைய படங்களான ‘ஆரம்பம்’, ‘விவேகம்’ ஆகியவற்றையும் ஆங்காங்கே நினைவூட்டுகிறது. யுவனின் இசை, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மென்மேலும் எகிறச் செய்கின்றன.
கரோனா அச்சுறுத்தல், அதனைத் தொடர்ந்த ஊரடங்கு, இழுபறி என அஜித் ரசிகர்களின் நீண்டகால ஏக்கத்தை படம் நிறைவேற்றுகிறதா என்பதை பொங்கல் பண்டிகை அன்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். கடந்த சில ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், அஜித் ரசிகர்களுக்கு இந்த அளவுக்கு எந்த ஒரு ட்ரெய்லரும் தீனி போடவில்லை என்று சொல்லலாம். இதோ அஜித்தின் 'வலிமை' ட்ரெய்லர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment