Published : 29 Dec 2021 08:45 PM
Last Updated : 29 Dec 2021 08:45 PM
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் மேக்கிங் வீடியோவில் இடம் பெற்ற பைக் காட்சி, ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித், தனக்கும் அஜித்துக்கும் நிகழ்ந்த முதல் சந்திப்பு எனப் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார் ஹெச்.வினோத்.
நீங்கள் முதன்முதலில் அஜித்தை சந்தித்து கதை சொன்ன அனுபவம் பற்றி..
நான் அவரிடம் படத்தின் ஒன்லைனர் சொன்னேன். அவர் அதைக் கேட்டுவிட்டு திருப்தியடைந்ததாகக் கூறினார். அந்தக் கதை சமூக அக்கறையுள்ள கதை. அதேவேளையில் அது அனைத்து மக்களையும் ரசிக்கவைக்கும்படி இருக்கும் என்று நம்பினார்.
நீங்கள் அஜித்தை வைத்து இயக்கிய நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஒரு ரீமேக். ஆகையால் வலிமை படத்தை மாஸ் வகையறாவில் கொண்டுவர அழுத்தம் இருந்ததா?
நிச்சயமாக இல்லை. நாங்கள் தேர்வு செய்த கதையிலேயே மாஸ் எலமென்ட்ஸ் அத்தனையும் இருந்தன. ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு சினிமாவுக்கான அம்சங்கள் இருந்தன.
இந்தக் கதை உண்மைக் கதையைத் தழுவியது எனக் கூறுகிறார்களே..!
இந்தப் படத்தில் பைக் பிரதான பங்கு வகிப்பதால் நாங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு ரேஸரை காவலராக பணித்தது குறித்த தகவலைத் தேடினோம். அவருடைய கதையைக் கேட்க விரும்பினோம். ஆனால் எங்களால் அவரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அந்த ஒரு சின்ன சம்பவத்தை நாங்கள் வலிமை படத்திற்கான ஒரு சிறு உத்வேகமாகப் பயன்படுத்திக் கொண்டோம்.
வலிமை மேக்கிங் வீடியோவைப் பார்த்து எல்லோரும் ஆச்சர்யத்தில் உள்ளனர். குறிப்பாக, அஜித் பைக்கிலிருந்து கீழே விழுந்து பின் எழுந்துவரும் காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அது எப்படி படமாக்கப்பட்டது?
அந்த பைக் காட்சி படமெடுக்க முன்னால் ஒரு பைக்கை வைத்து அதில் கேமராவைப் பொருத்தியிருந்தோம். அருகிலேயே ஒரு கார் பக்கவாட்டில் பயணித்தது. அதிலிருந்த கேமரா பக்கவாட்டுக் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தது. அந்தக் காரில் இருந்த கேமராமேன் ப்ளூடூத் வாயிலாக அஜித்துக்கு தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார். இந்தப் படப்பிடிப்பு 7 கிலோமீட்டர் தூரத்திற்குள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நான் சாலையின் ஆரம்பப் புள்ளியில் நின்றிருந்தேன். குறித்து நேரத்துக்குள் பைக் வராததால் நான் பைக் காட்சி நடந்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றேன். அங்கே கூட்டமாக இருந்தது. சரி காட்சியை சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள் என நினைத்து கூட்டத்திற்குள் சென்றால் அஜித் சார் காயமடைந்திருந்தார். பைக் உடைந்துபோயிருந்தது. ஆனால் இந்தச் சம்பவத்தைவிட மனதை கனமாக்கியது அடுத்த நாள் சூட்டிங்குக்கு அஜித் சார் நேரத்திற்கு வந்தது தான். அதனால் தான் நாங்கள் அந்த வீடியோவைப் பகிர்ந்தோம். எத்தனை சவால்கள் வந்தாலும் நடப்பவை நல்லதாகவே இருக்கும் என்பதை உணர்த்தவே பகிர்ந்தோம்.
அஜித்துடன் மூன்று படங்கள் அடுத்தடுத்து செய்கிறீர்கள். உங்களிடம் எதைக் கண்டு அவர் மீண்டும் மீண்டும் பயணிக்கிறார் என நினைக்கிறீர்கள்?
அஜித் சார் இதற்கு முன்னதாக சிவாவுடன் தொடர்ச்சியாக மூன்று படங்கள் செய்தார். சிவாவுடன் வீரம், விவேகம், விசுவாசம் என மூன்று படங்களைச் செய்தார். நானே அவரிடம் நிறைய முறை இதைப் பற்றிப் பேசியுள்ளேன். உங்களுக்காக நிறைய பேர் கதை எழுதிக் கொண்டு காத்திருக்கிறார்கள். நீங்கள் அவர்களிடம் கதை கேட்டு வாய்ப்பு கொடுத்தால் அந்த உதவி இயக்குநர்களின் வாழ்க்கை வெளிச்சம் பெறும் எனக் கூறியிருக்கிறேன். அவரும் அதற்கு இசைவு தெரிவித்தார். ஆனால், ஒரு கதையை படமாக மாற்றும் ஒப்பந்தத்தை ஏற்படுத்த அந்த இயக்குநருடன் ஒரு பொறி ஏற்பட வேண்டும் என நினைக்கிறார்.
முதல் நாள் சந்தித்தது முதல் மூன்றாவது படத்திற்கு கைகோத்துள்ளது வரை.. அஜித் அன்றும் இன்றும் எப்படி இருக்கிறார்?
எல்லா கமர்ஷியல் இயக்குநருக்கும் பெரிய ஹீரோக்களுடன் வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஒரு நட்சத்திரமாக இருந்து கொண்டு அஜித் சார் மிகவும் எளிமையாகவே இருக்கிறார். எனக்காக காப்பி கொண்டுவந்து கொடுத்திருக்கிறார். எப்போதும் அவர் என்னை ஆச்சர்யப்படுத்துகிறார். ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கும் போதும் எனக்கு சற்றும் குறையாத உற்சாகம் ஏற்படுகிறது.
அடிக்கடி அவர் செட்டில் பேசுவது ஏதாவது சுட்டிக்காட்ட முடியுமா?
எப்போதெல்லாம் நான் சோர்வாக இருக்கிறேன். எப்போது காட்சிகள் திட்டமிட்டபடி வரவில்லை என்பதை அவர் நன்கு அறிவார். அவ்வாறாக நான் சோர்ந்து போகும்போதெல்லாம் என் தோள்களில் தட்டிக் கொடுத்துவிட்டு, எல்லாம் சரியாக நடக்கும் என்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT