Published : 20 Dec 2021 01:01 PM
Last Updated : 20 Dec 2021 01:01 PM
திரைப்படங்களை வடக்கு, தெற்கு என்று பிரிப்பதைத் தான் எப்போதும் எதிர்ப்பதாக தனுஷ் கூறியுள்ளார்.
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இப்படம் தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
இப்படத்துக்கான விளம்பரப் பணிகளுக்காக தனுஷ், சாரா அலிகான் உள்ளிட்ட படக்குழுவினர் பல்வேறு பேட்டிகளை அளித்து வருகின்றனர்.
சமீபத்தில் தனுஷ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:
''இந்தியத் திரைப்படங்களை வடக்கு, தெற்கு என்று பிரிப்பதை நான் எப்போதும் எதிர்க்கிறேன். அனைத்தும் இந்தியப் படங்கள் என்றே அழைக்கப்பட வேண்டும். தற்போது தென்னிந்தியத் திரைப்படங்கள் உலக அளவில் பிரபலமாவது மிகவும் ஆரோக்கியமானது. அந்த மாற்றத்தை நோக்கி நாம் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம். இது நடிகர்கள், திரைப்படங்கள், படைப்பாளிகள் என அனைவரும் உலக அளவிலான மக்களைச் சென்றடைய உதவுகிறது.
முதலில் அத்தகைய சாதனையைச் செய்தவர் ரஜினிகாந்த். அவர் தேசிய அளவில், உலக அளவில் பிரபலமாக இருக்கிறார். அவருக்கு ஜப்பான், கனடா, அமெரிக்கா என அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் உண்டு. அவருக்குப் பிறகு ‘பாகுபலி’ திரைப்படம். இந்த ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தது''.
இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT