Published : 17 Dec 2021 01:29 PM
Last Updated : 17 Dec 2021 01:29 PM
கதையின் 'மாஸ்' நாயகனாக அல்லு அர்ஜுன், 'ஆன்டகனிஸ்ட்' ஆக ஃபகத் பாசில், ராஷ்மிகாவின் ஹிட்டடித்த பாடல் காட்சிகள், சர்ச்சைக்கு வித்திட்ட சமந்தா தோன்றும் ஒற்றைப் பாடல், மிரட்டலான ட்ரெய்லர், இவற்றுக்கெல்லாம் உச்சமாக இயக்குநர் சுகுமாரின் 'ரங்கஸ்தலம்' கொடுத்த மாபெரும் வெற்றியால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் ‘புஷ்பா’, எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்ததா? - இதோ முதல் பார்வை...
இயல்பிலேயே யாருக்கும் அடங்காதவரான புஷ்பராஜ் (அல்லு அர்ஜுன்) செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவரான கொண்டாரெட்டியிடம் (அஜய் கோஷ்) வேலைக்குச் சேர்கிறார். செம்மரங்களை போலீஸாருக்கு தெரியாமல் லாவகமாக கடத்திச் செல்லும் நுட்பம் அல்லு அர்ஜுனுக்கு தெரிவதால் கூலிக்கு வேலை செய்யும் அவருக்கு பெரும் பொறுப்புகளையும் பணத்தையும் கொடுக்கிறார் கொண்டாரெட்டி. ஒரு கட்டத்தில் ஒரு லோடு செம்மரத்துக்கு 4 சதவீத பங்கு என்ற அடிப்படையில் அவரை பார்ட்னராகவும் சேர்த்துக் கொள்கிறார். இதன் பிறகு கொண்டாரெட்டியின் இன்னொரு பார்ட்னரான மங்களம் ஸ்ரீனுவால் (சுனில்) அல்லுவுக்கு ஒரு சிக்கல் எழுகிறது. இதனை எப்படி அவர் எதிர்கொண்டார் என்பதே ‘புஷ்பா’ படத்தின் திரைக்கதை.
கூலித் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கும் புஷ்பா கதாபாத்திரம் எப்படி ஒரு கடத்தல் கும்பல் தலைவனாகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். ஆரம்பத்திலேயே படம் நேரடியாக மையத்துக்குள் பயணிக்கத் தொடங்கி விடுகிறது. செய்த வேலைக்கு கூலி வாங்கும்போது கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் காட்சியிலேயே புஷ்பாவின் இயல்பு நமக்குச் சொல்லப்பட்டு விடுகிறது. அதற்கு அடுத்தடுத்த காட்சிகளிலிருந்தே படம் இடைவேளை வரை எங்கும் நிற்காமல் செல்கிறது. வழக்கமான 'டான்', 'கேங்ஸ்டர்' படங்களில் பார்த்த அதே கதைதான். எனினும், அதனை தனது சுவாரஸ்ய காட்சியமைப்புகள் மூலம் எங்கும் தொய்வு ஏற்படாமல் முதல் பாதி முழுக்க கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் சுகுமார். கவனிக்க... முதல் பாதி மட்டும்தான்.
திரைக்கதை எதை நோக்கிச் செல்கிறது என்பது ஏறக்குறைய படத்தின் இடைவேளை வரை தெரியவே இல்லை. முதல் பாதி முழுவதுமே கதைக்கு தொடர்பே இல்லாத பல காட்சிகள் நிறைந்திருக்கின்றன. ஆனால், அவை சுவாரஸ்யமான காட்சி அமைப்புகளின் ஓட்டத்தில் குறையாக தெரியவில்லை. கிட்டத்தட்ட இடைவேளைக்குப் பிறகுதான் கதையின் நோக்கமே பார்வையாளர்களுக்கு புரியவருகிறது. என்னதான் அடிமட்ட தொழிலாளியாக இருந்தவர் டானாக மாறுகிறார் என்பதுதான் கதை என்று சொன்னாலும், திரைக்கதையில் ஒரு பிடிமானம் இருக்கவேண்டுமல்லவா? அது இயக்குநருக்கே இல்லை.
நாயகனாக அல்லு அர்ஜுன் சிறப்பான தேர்வு. உடல்மொழி, வசன உச்சரிப்பு என முற்றிலும் புதிய பரிணாமம். படத்தில் எங்குமே அல்லு அர்ஜுன் தென்படவில்லை. புஷ்பராஜ் என்கிற அந்த கதாபாத்திரம்தான் தெரிகிறது. நாயகியாக ராஷ்மிகா கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் ஓரளவு நடிக்கவும் செய்திருக்கிறார். இவர்கள் தவிர படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்கள் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். ஃபகத் பாசில் கிட்டத்தட்ட பிற்பகுதியின் கடைசி அரை மணி நேரத்துக்குத்தான் வருகிறார். அவரை வைத்துதான் இரண்டாம் பாகம் இருக்கப் போகிறது என்பதை க்ளைமாக்ஸ் உணர்த்துகிறது.
படத்தின் மிகப்பெரிய மைனஸ், நீளம். திரைக்கதையின் வேகத்தை குறைக்கும் பாடல்களை வெட்டியிருந்தாலே அரை மணி நேரம் மிச்சமாகியிருக்கும். ஆனால், பாடல்கள் ஏற்கெனவே அனைத்து மொழிகளில் ஹிட் என்பதால் அவற்றை அப்படியே வைத்துவிட்டார்கள் போலும்.
மிரோஸ்லா கூபாவின் ஒளிப்பதிவு மிரட்டுகிறது. கேங்க்ஸ்டர் படத்துக்கு தேவையான கச்சிதமான ஒளிப்பதிவை செய்திருக்கிறார். படத்துக்கு பெரும் பலம், தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை. ஆக்ஷன் காட்சிகளில் ருத்ரதாண்டவமே நிகழ்த்தியிருக்கிறார். பாடல்களும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஏற்கெனவே இணையத்தில் ஹிட்டடித்த 'ஊ சொல்றியா' பாடலுக்கும், 'சாமி சாமி' பாடலுக்கு அரங்கம் அதிர்கிறது.
முதல் பாதியில் கதை வலுவாக இல்லையென்றாலும் காட்சிகளில் இருந்த சுவாரஸ்யம் கூட இரண்டாம் பாதியில் மொத்தமாக காணாமல் போகிறது. இதனால் படத்தின் நீளம் ஒரு பெரும் குறையாக தெரியத் தொடங்கி கடும் சலிப்பை ஏற்படுத்துகிறது. செம்மரங்களை டன் கணக்கில் ஆற்றில் கொட்டும் காட்சியில் லாஜிக் மருந்துக்கும் இல்லையென்றாலும், அதைக் காட்சிப்படுத்திய விதம் சிறப்பு. அதேபோல புஷ்பாவின் அப்பா குறித்து ஆரம்பத்தில் வரும் கதாபாத்திரங்கள் சொல்வது சரி, ஆனால் திரும்பத் திரும்ப போகின்ற வருகின்ற கதாபாத்திரமெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பது வலிந்து திணிக்கப்பட்ட உணர்வையே தருகிறது.
அதிலும் புஷ்பா அப்பாவின் முதல் மனைவியின் மகன்களுக்கு வேறு வேலையே கிடையாது போலும். புஷ்பா சிறுவயதில் பள்ளியில் சேரும்போது சரியாக அங்கு வந்து அவரை அவமானப்படுத்துகிறார்கள். அதன் பின்னர் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்படும்போதும் சரியாக அங்கு வந்துவிடுகின்றனர். க்ளைமாக்ஸில் திருமணம் நடக்கும்போது மீண்டும் வந்துவிடுவார்களோ என்ற பீதி ஏற்பட்டதை தவிர்க்கமுடியவில்லை. க்ளைமாக்ஸில் ஃபஹதும், அல்லுவும் ஆடைகளை களைந்து விட்டு நிற்கும் காட்சி அடுத்த ஒரு வாரத்துக்கு சமூக வலைதளங்களுக்கு சரியான தீனியாக இருக்கும்.
திரைக்கதையில் கவனம் செலுத்தி, நீளத்தை பாரபட்சமின்றி கத்தரித்திருந்தால் ‘ரங்கஸ்தலத்தை’ விஞ்சிருக்கும் இந்த ‘புஷ்பா’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT