Published : 15 Dec 2021 01:54 PM
Last Updated : 15 Dec 2021 01:54 PM
8 பேர் கலந்து கொள்வதற்குப் பெயர் பார்ட்டி இல்லை என்று இயக்குநர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தனது இல்லத்தில் ப்ரைவேட் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் பாலிவுட் நடிகை கரீனா கபூர், அம்ரிதா அரோரா உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டி நடந்த ஒரு வாரத்துக்குப் பிறகு கடந்த ஞாயிறு அன்று கரீனா கபூர், அம்ரிதா அரோரா இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரீனா கபூர், அம்ரிதா அரோரா இருவருடனும் பார்ட்டியில் கலந்துகொண்ட நபர்களைக் கண்டறிந்த மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்த கரண் ஜோஹருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகப் பலரும் சமூக வலைதளங்களில் கரண் ஜோஹரைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கரண் ஜோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''நானும் என் குடும்ப உறுப்பினர்களும் கரோனா பரிசோதனை செய்து கொண்டோம். கடவுளின் அருளால் எங்கள் யாருக்கு கரோனா தொற்று இல்லை. மும்பையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. அவர்களுக்குத் தலைவணங்குகிறேன்.
அதே நேரத்தில் 8 பேர் கலந்து கொள்வதற்குப் பெயர் பார்ட்டி இல்லை என்பதையும் மீடியாவில் இருக்கும் சிலருக்கு நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கடுமையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும் என்னுடைய இல்லம் கரோனாவைப் பரப்பும் ஹாட்ஸ்பாட் அல்ல. மீடியாவில் இருக்கும் அந்தக் குறிப்பிட்ட சிலர் உண்மைத் தகவல்கள் எதுவும் இன்றி செய்தி வெளியிடுவதில் கவனமாக இருக்குமாறு கோரிக்கை வைக்கிறேன்''.
இவ்வாறு கரண் ஜோஹர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT