Published : 04 Dec 2021 10:03 AM
Last Updated : 04 Dec 2021 10:03 AM
ஜி.வி.பிரகாஷின் மாபெரும் பலமாக நான் நினைப்பது இதயத்தை உருக்கும் மெலடி என்று இயக்குநர் வசந்தபாலன் கூறியுள்ளார்.
இதுகுறித்து வசந்தபாலன் தன் ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
''17 வயது ஜிவியுடன் ‘வெயில்' திரைப்படத்தில் என் இசைப் பயணம் தொடங்கியது.
‘வெயிலோடு விளையாடி’ பாடலையும் ‘உருகுதே மருகுதே’ பாடலையும் நேர்த்தியாக உருவாக்கினால்தான் மேற்கொண்டு ஜிவி உடன் நான் பயணிக்க முடியும் என்று ஒரு மாபெரும் சவால் எங்கள் முன் இருந்தது.
எப்பாடு பட்டேனும் இந்த இரண்டு பாடல்களை மகத்தான வெற்றிப் பாடல்களாக உருவாக்க வேண்டும் என்று பகலிரவாக நானும் ஜிவியும் நா.முத்துக்குமாரும் இடைவிடாது அழித்தழித்து யோசித்து அந்தப் பாடல்களை உருவாக்கி வெற்றி கண்டோம்.
இன்று திரும்பிப் பார்க்கும்போது ‘வெயிலோடு’ பாடலும் ‘உருகுதே’ பாடலும் ரசிகர்களால் ஒரு கிளாசிக்காகப் பார்க்கப்படுவதைக் காணும்போது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜிவியின் மாபெரும் பலமாக நான் நினைப்பது இதயத்தை உருக்கும் மெலடி. ‘கதைகளைப் பேசும் விழியருகே’ பாடலும், ‘உன் பெயரைச் சொல்லும்போதே’ என்ற பாடலும் 'அங்காடித் தெரு'வில் இன்னும் காதலர்களின் கீதமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
'ஜெயில்' திரைப்படத்தில் நாங்கள் இருவரும் இணையும்போது, முன்னிருக்கும் பாடலின் சாதனையை இலக்காக வைத்துக்கொண்டு பாடல்களை உருவாக்க அமர்ந்தோம். உருகுதே பாடலுக்கு அருகில் செல்லக்கூடிய ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியின் வெளிப்பாடுதான் 'காத்தோடு காத்தானேன்' பாடல்.
6 பாடல்களைக் கொண்ட ‘ஜெயில்’ திரைப்படத்தின் இசை ஆல்பம் மிக அழகாக வந்துள்ளது. உங்கள் இசை ரசனை மீது பெரும் நம்பிக்கை கொண்டு இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளோம்.
உங்களின் பேரன்பை எதிர்நோக்கி அன்புடன் வசந்தபாலன்''.
இவ்வாறு அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT