Published : 29 Nov 2021 08:04 AM
Last Updated : 29 Nov 2021 08:04 AM

திரை விமர்சனம்: ராஜவம்சம்

அதிக உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக் குடும்பத்தின் கடைசி செல்ல மகன் சசிகுமார். சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் அவரால், அந்த நிறுவனத்துக்கு பெரிய புராஜெக்ட் கிடைக்கிறது. அதை 30 நாட்களில் முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட, அந்த சவாலை ஏற்கிறார். இதற்கிடையில் அவருக்கு பெண் பார்த்து முடிவு செய்கின்றனர். நிச்சயத்துக்கு சிலநாட்கள் முன்பு அவரை சந்திக்கும் மணப்பெண், இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்கிறார். இதனால், குடும்பத்தார் முன்னால் தனது காதலிபோல நடித்து, நிச்சயதார்த்தத்தை நிறுத்துமாறு சக ஊழியர் நிக்கி கல்ராணியிடம் மன்றாடி, அவரை கிராமத்துக்கு அழைத்து வருகிறார்.

சசிகுமாரை நம்பும் குடும்பத்தார் நிக்கி கல்ராணியை நம்பினரா? புராஜெக்ட் என்ன ஆனது என்பது மீதிக் கதை. கூட்டுக் குடும்பம், உறவு, பாசம் ஆகியவற்றுடன் மென்பொருள் துறையை இணைத்து கதையை நவீனப்படுத்துவதாக நினைத்து, வழக்கமான சென்டிமென்ட் டிராமாவை தந்துள்ளார் இயக்குநர் கதிர்வேலு. கூட்டுக் குடும்பத்தை அன்பும், பாசமும் வழிந்தோடும் வெள்ளந்தி மனிதர்களின் ஆலயமாக சித்தரிப்பது பெரிய ஆறுதல். கிராமத்துக்கு வந்ததும் ‘புராஜெக்ட் டார்கெட்’ பற்றி எந்த கவலையும் இன்றி, நிக்கியுடன் பாடி, ஆடி, திருவிழாவில் பொங்கல் வைத்துகொண்டு திரிகிறார் சசிகுமார். காதலியாக நடிக்க வந்த நிக்கியின் பிளாஷ்பேக் ஒரு ஜிலீர் சேஞ்ச் ஓவர்! யோகிபாபு வரும் காட்சிகளும் அவரது வசன காமெடியையும் ரசிக்கும் படி இருக்கின்றன. அவரை கூட்டுக் குடும்பத்தில் இணைத்ததும், அவர் ராதாரவியின் மகள்களை காதலிப்பதும் கதைக்கு அவசியமில்லாத சேர்க்கை.

வசனம் பேசியும், எதிரிகளை சண்டையில் துவம்சம் செய்தும், குடும்பத்தினரிடம் உருகியும் சசிகுமார் ஸ்கோர் செய்ய ஏகப்பட்ட வாய்ப்பு. அவற்றை தனக்கே உரிய பாணியில் ஊதித் தள்ளுகிறார். நிக்கி கல்ராணிக்கு வணிகப் படக் கதாநாயகி என்பதை தாண்டி ஸ்கோர் செய்யகிடைத்த இடங்களில் ‘வெரி குட்’ சொல்ல வைக்கிறார்.

சசிகுமாரின் குடும்ப உறுப்பினர்களாக வரும் பாதிபேர் நகைச்சுவை நடிகர்கள். இவர்களது நகைச்சுவை ஈர்க்கவில்லை என்றாலும் பழுதில்லை. நகரம், கிராமம் இரண்டையுமே பசுமையாகவும், பாடல் காட்சிகளைக் கொண்டாட்ட மனநிலையுடனும் பதிவு செய்கிறது சித்தார்த்தின் ஒளிப்பதிவு. போதிய இடைவெளியில் வரும் தன்னுடைய பாடல்களால் ஈர்க்கிறார் சாம் சி.எஸ். மென்பொருள் துறையில் ஒரு பெரிய பணியை ஒரு குறிப்பிட்ட அவகாசத்துக்குள் முடித்துக் கொடுப்பதில் இருக்கும் அழுத்தம், சிக்கல்களை திரைக் கதையின் ‘டெம்போ’வுக்கு பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருந்தும் அதில் கோட்டைவிட்ட இயக்குநர், ‘குடும்ப நாடக’மாக படத்தை சுருக்கி விட்டதால், இரண்டரை மணிநேர டெலிபிலிம் பார்த்த உணர்வை தருகிறது இந்த ‘ராஜவம்சம்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x