Published : 22 Nov 2021 11:44 AM
Last Updated : 22 Nov 2021 11:44 AM
கோவா திரைப்பட விழாவில் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸிக்கு ‘சத்யஜித் ரே விருது’ வழங்கப்பட்டது.
52-வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. விழா முடிவில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும். தமிழில் இருந்து வினோத்ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படம் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
இந்நிலையில் இந்த விழாவில் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸிக்கு ‘சத்யஜித் ரே விருது’ வழஙகப்பட்டது. கோவா திரைப்பட விழாவுக்கு அவர் நேரில் வந்து கலந்து கொள்ளவில்லை. எனினும் விருது பெற்றது குறித்து மார்ட்டின் ஸ்கோர்செஸி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
''சத்யஜித் ரே பெயரில் விருது பெறுவது எனக்கு எத்தனை பெருமையாக உள்ளது என்பதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. ரே என்னுடைய குருநாதர்களில் ஒருவர். எனது வாழ்க்கையில் பல ஆண்டுகளாக நான் பயிற்சி பெற்ற திரைப்பட இயக்குநர்களில் அவரும் ஒருவர்.
நான் 'பதேர் பாஞ்சாலி'யைப் பார்த்தபோதே அவருடைய படங்களின் மீதான என் காதல் தொடங்கிவிட்டது. மேற்கில் வளரும் ஒருவருக்கு அது ஒரு புதிதான அனுபவம். அது எனக்கு ஒரு புதிய உலகத்தைத் திறந்தது. அவர் படங்களில் இசையைப் பயன்படுத்தும் முறை என் படங்களுக்கான தாக்கத்தை உண்டாக்கியது.
நான் ரவிசங்கரால் மேம்படுத்தப்பட்ட 'பதேர் பாஞ்சாலி'யின் இசைப் பதிவைக் கண்டுபிடித்து நியூயார்க்கில் உள்ள எனது பெற்றோருக்கு எடுத்துச் சென்றேன். அதுபோன்ற இசையை இதுவரை கேட்டிராத உழைக்கும் வர்க்கத்தினர் அவர்கள். அவர்கள் அதை மிகவும் ரசித்தார்கள். நான் அவருடைய படங்களை எப்போதும் என்னுடன் வைத்திருப்பேன். நான் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்போது நான் அவற்றை நோக்கிச் செல்வேன்.
என் மகள் ஃபிரான்செஸ்காவுக்கு 12 அல்லது 13 வயது இருக்கும்போது அவளுக்கு நான் காட்டிய படங்களில் ஒன்று 'பதேர் பாஞ்சாலி'. மேலும் அப்படம், அவள் உலகத்தையும் வெவ்வேறு கலாச்சாரங்களையும் உணரும் விதத்தை மாற்றியது என்பதையும் நான் அறிவேன். அவளுக்கு இப்போது 22 வயது. சத்யஜித் ரே மற்றும் இந்தியத் திரைப்படத் துறையினருக்கு நன்றி. நான் அங்கு 1996-ல் மட்டுமே வந்தேன். இப்போது மீண்டும் வர விரும்புகிறேன்''.
இவ்வாறு மார்ட்டின் ஸ்கோர்செஸி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment