Published : 12 Nov 2021 10:01 AM
Last Updated : 12 Nov 2021 10:01 AM
முதல்வர் ஸ்டாலின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக சென்னையில் மழையின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது.
பல இடங்களில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வந்தார். ஆய்வின்போது ‘கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு மழைநீர் வடிகால் பணிகள் எதுவும் செய்யவில்லை’ என்று செய்தியாளர்களிடன் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
இன்னொரு புறம் தமிழக அரசு சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே மழை நீர் தேங்கியதற்கு காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அரசியல்வாதிகள் தங்கள் சண்டைகளை மழை முடிந்ததும் வைத்துக் கொள்ளலாம் என்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கூறியுள்ளார்.
தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
நம் முதல்வர் ஸ்டாலின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரை வேலை செய்ய விடுங்கள். அரசியல் எல்லாம் பிறகு. நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே இது போன்ற இன்னல்களை கடந்து வர இயலும். இவை முடிந்த பிறகு அரசியல்வாதிகள் தங்கள் சண்டைகளை வைத்துக் கொள்ளட்டும். அரசியல்வாதிகளின் உண்மையான குணம் நமக்கு தெரியும். அவர்கள் விளம்பரம் செய்து கொள்ள நாம் அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT