Published : 08 Nov 2021 12:41 PM
Last Updated : 08 Nov 2021 12:41 PM
பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையால் ராசாக்கண்ணு உயிரிழந்த நிலையில், வறுமையில் உள்ள அவரது மனைவியான பார்வதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக அறிவித்துள்ளார்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் காட்டப்பட்ட ராசாக்கண்ணு மீது பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தற்போது தான் மிகவும் வறுமையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
''செய்யாத குற்றத்துக்காக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு ராசாக்கண்ணு கொல்லப்பட்டார். அவரது மனைவி பார்வதி அம்மாவின் இன்றைய வாழ்க்கை நிலையை தனியார் யூடியூப் சேனலில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. அவர்களின் மூலம் மேலும் விவரங்களைக் கேட்டறிந்ததும் கூடுதலாகத் துயருற்றேன். பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமை நிலையினை என் கவனத்துக்குக் கொண்டுவந்த யூடியூப் குழுவினருக்கு என் நன்றிகள்.
28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயர நிகழ்வை, இன்றைக்குத் தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ‘ஜெய் பீம்’ படக்குழுவினருக்கும், ‘ஜெய்பீம்’ படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும், இயக்குநர் த.செ.ஞானவேலுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும்''.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT