Published : 07 Nov 2021 12:52 PM
Last Updated : 07 Nov 2021 12:52 PM
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் ‘ஜெய் பீம்’ படத்தில் ஒரு காட்சியில் இந்தி பேசும் நபர் ஒருவரை தமிழில் பேச சொல்லி காவல்துறை அதிகாரியான பிரகாஷ்ராஜ் அறைவது போல ஒரு காட்சி இருக்கும். இக்காட்சிக்கு வட இந்தியர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தி பேசினால் அடிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
‘ஜெய் பீம்’ போன்றதொரு ஒரு படத்தை பார்த்த பின்பு அவர்களுக்கு பழங்குடியின மக்களின் துயரம் தெரியவில்லை. அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி எதையும் அவர்கள் பார்க்கவோ உணரவோ செய்யவில்லை. ஆனால் அவர்களுக்கு அந்த அறை மட்டும்தான் பெரிதாக தெரிகிறது. இது தான் அவர்களின் புரிதல். இது அவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.
தங்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற கோபம் தென்னிந்தியர்களுக்கு உண்டு. அப்படி இருக்கையில் தமிழ் தெரிந்து கொண்டே இந்தியில் பேசும் ஒருவரை ஒரு காவல்துறை அதிகாரி எப்படி விசாரிப்பார்?
இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT