Published : 05 Nov 2021 01:33 PM
Last Updated : 05 Nov 2021 01:33 PM
மணி சாருடைய விளக்கம் தனக்குத் திருப்திகரமாக இல்லை என்று பொன்ராம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஆந்தாலஜி 'நவரசா'. 9 கதைகள் கொண்ட இந்த ஆந்தாலஜியை 9 இயக்குநர்கள் இயக்கியிருந்தார்கள். இதில் பங்கேற்ற அனைவருமே எந்த ஊதியமும் இல்லாமல் பணிபுரிந்திருந்தனர். 'நவரசா' ஆந்தாலஜி மூலம் வந்த பணத்தை வைத்து, கரோனா ஊரடங்கு சமயத்தில் பணியில்லாமல் இருந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் பொருட்கள் வாங்க கார்டு முறை வழங்கப்பட்டது. இதை வைத்து சுமார் 6 மாதங்களுக்கு 12,000 பேர் பயனடைந்துள்ளனர்.
இந்த ஆந்தாலஜியை இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். 9 நவரசங்களைக் கொண்ட கதைகளை வைத்து 9 பேர் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் காமெடி என்ற ரசத்தை வைத்து உருவாகும் கதையை பொன்ராம் இயக்கியிருந்தார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால், திடீரென்று காமெடி என்ற ரசத்தின் கதையை ப்ரியதர்ஷன் இயக்கியிருந்தார். பொன்ராம் கதை என்ன ஆனது என்பது தெரியாமலேயே இருந்தது.
தற்போது தனது இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'எம்.ஜி.ஆர் மகன்' படத்தை விளம்பரப்படுத்த 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் பொன்ராம். அந்தப் பேட்டியில் 'நவரசா' ஆந்தாலஜியில் தனது கதை இடம்பெறாதது குறித்து பொன்ராம் கூறியிருப்பதாவது:
" 'நவரசா' ஆந்தாலஜியில் வெளியேற்றப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. உண்மையான காரணம் என்னவென்று தயாரிப்பாளர்களுக்குத்தான் தெரியும். படத்தின் ஆடியோவில் பிரச்சினை இருப்பதாக மணி சார் சொன்னார். ஆனால், அந்த விளக்கம் எனக்குத் திருப்திகரமாக இல்லை.
எங்கள் படம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. அதில் சம்பந்தப்பட்ட அனைவருமே உண்மையாக உழைத்தோம். ஆனால், கடைசியில் மனமுடைந்து போனோம்".
இவ்வாறு பொன்ராம் தெரிவித்துள்ளார்.
'நவசரா' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டதால், வேறு எந்தவொரு ஓடிடி தளத்துக்கும் பொன்ராமால் அவரது படத்தை விற்க முடியவில்லை. இவருடைய படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT