Published : 01 Nov 2021 11:59 AM
Last Updated : 01 Nov 2021 11:59 AM
பிரபல சமையல் கலைஞர் தாமுவுக்கு லண்டனில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
இந்தியாவின் பிரபலமான சமையல் கலைஞர்களில் ஒருவராக அறியப்படுபவர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் கோதண்டராமன் தாமோதரன். உணவு வழங்கல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள தாமு இத்துறையில் அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். இது தவிர பல்வேறு விருதுகளை தாமு பெற்றுள்ளதோடு, 3 கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்றதன் மூலம் சமூக வலைதளங்களிலும் தாமு மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் வரும் நவம்பர் 5 அன்று லண்டனில் நடைபெற உள்ள உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சியில் செஃப் தாமுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் நடைபெறும் நிகழ்ச்சியில் லண்டன் உலகத் தமிழ் அமைப்பு இந்த விருதை தாமுவுக்கு வழங்குகிறது.
இதுகுறித்து தாமு கூறியுள்ளதாவது:
''என்னுடைய பல ஆண்டுகால கடின உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை நான் பார்க்கிறேன். இந்தப் பிரிவில் முதல் விருதைப் பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய தருணம் ஆகும். மேலும், இந்த விருது இளம் சமையல் கலைஞர்களை ஊக்குவிப்பதாக இருக்கும். கடின உழைப்பால் நீங்கள் எந்த உயரத்தையும் எட்டிவிட முடியும் என்பதற்கு இது மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்''.
இவ்வாறு செஃப் தாமு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT