Published : 26 Oct 2021 03:57 PM
Last Updated : 26 Oct 2021 03:57 PM
ரஜினியைக் கட்டாயப்படுத்தி நடிக்க அனுப்பி வைத்தேன் என்று அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார்.
67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இந்த விழாவில் ரஜினி பேசும் போது, "நான் நடத்துநராக இருந்தபோது நண்பர் ராஜ்பகதூர்தான் என்னுள் இருக்கும் நடிப்புத் திறனை அடையாளம் கண்டு கொண்டார். திரைத்துறையில் நான் சேர ஊக்கம் கொடுத்தார்" என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.
தான் நடிக்க வந்ததற்கு காரணமே நண்பர் ராஜ்பகதூர்தான் என்று ரஜினி கூறியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
ரஜினியின் பேச்சு தொடர்பாக நண்பர் ராஜ்பகதூர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
"ரஜினிக்குத் தொடக்கத்தில் நடிக்க விருப்பமே இல்லை. அவருக்கு அந்த விருப்பத்தை உருவாக்கி ஊக்கமளித்தேன். அவர் நடித்த நாடகத்தில் நடிப்பைப் பார்த்து, நடிகனுக்கு தேவையான அத்தனை விஷயங்களும் அவரிடம் இருந்ததைக் கண்டுபிடித்தேன்.
திரைப்படக் கல்லூரிக்குப் போ, அங்கு பெரிய பெரிய இயக்குநர்கள் வருவார்கள். உன் நடிப்பைப் பார்த்து சினிமாவில் வாய்ப்பு கொடுப்பார்கள் என்று அவரைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தேன். அங்குதான் இயக்குநர் பாலசந்தர் சார் ரஜினியைப் பார்த்து அவருக்கு நடிக்க வாய்ப்பு அளித்தார்.
தாதா சாகேப் பால்கே விருது ரஜினிக்குக் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. விழா மேடையில் எனது பெயரை உச்சரித்தது அவனுடைய நன்றியைக் காட்டுகிறது".
இவ்வாறு ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT