Published : 25 Oct 2021 01:05 PM
Last Updated : 25 Oct 2021 01:05 PM

தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இல்லை: தேசிய விருது விழாவில் ரஜினி உருக்கம்

டெல்லி

தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இல்லை என்று தாதா சாகேப் பால்கே விருது பெற்றுக் கொண்டு ரஜினி தெரிவித்தார்.

இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. 2019-ம் ஆண்டிற்கான இந்த விருது ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

இன்று டெல்லியில் நடைபெற்று வரும் 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இந்த விருதினை வழங்கினார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். ரஜினிக்கு விழாவில் கலந்துக் கொண்ட அனைவருமே எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தார்கள்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்றுக் கொண்டு ரஜினிகாந்த் விழாவில் பேசியதாவது:

"அனைவருக்கும் காலை வணக்கம், கவுரமிக்க இந்த விருதைப் பெறுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த தாதா சாஹேப் பால்கே விருதை எனக்குக் கொடுத்து கவுரவித்திருக்கும் மத்திய அரசுக்கு நன்றி. இந்த விருதை எனது வழிகாட்டி, எனது குரு கே பாலச்சந்தர் சாருக்கு அர்ப்பணிக்கிறேன். அதிக நன்றியுணர்வுடன் அவரை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

எனது சகோதரர் சத்யநாராயண கெய்க்வாட், என்னை ஒரு தந்தை போல வளர்த்தவர். நல்ல பண்புகளையும், ஆன்மிகத்தையும் எனக்குப் போதித்தவர், அவரை நினைத்துப் பார்க்கிறேன். கர்நாடகாவில் என்னுடன் பணியாற்றிய பேருந்து ஓட்டுநர், என் நண்பர் ராஜ் பகதூரை நினைத்துப் பார்க்கிறேன். நான் நடத்துநராக இருந்தபோது ராஜ்பகதூர் தான் என்னுள் இருக்கும் நடிப்புத் திறனை அடையாளம் கண்டு கொண்டார். திரைத்துறையில் நான் சேர ஊக்கம் கொடுத்தார்.

எனது படங்களைத் தயாரித்த, இயக்கிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை, அதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை, சக நடிகர்களை, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள், என் அத்தனை ரசிகர்களையும் நினைவுகூர்கிறேன். தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த்."

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x