Published : 21 Oct 2021 03:46 PM
Last Updated : 21 Oct 2021 03:46 PM

ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் அறிமுகமாகும் இலங்கை நாதஸ்வரக் கலைஞர்

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞரான கே.பி.குமரன், தீபாவளி அன்று வெளியாக உள்ள ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் இசையமைப்பாளர் இமான் இசையில் அறிமுகமாகின்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168வது படமான ‘அண்ணாத்த’ வெளியீட்டிற்காக ரஜினியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அண்ணாத்த திரையரங்குகளில் நவம்பர் 4 தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சிவா இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர்.

அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து ரஜினிகாந்தின் பரபரப்பான சண்டைக் காட்சிகள் கொண்ட படத்தின் டீசரும் வெளியாகின. படத்தில் இசையமைப்பாளராக இமான் பணிபுரிந்துள்ளார். கவிஞர் விவேகா எழுதி, மறைந்த பிரபலப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடியிருந்த 'அண்ணாத்த அண்ணாத்த' என்ற பாடல் முதலாவதாக வெளியாகி திரையிசை ஆர்வலர்களை நெகிழ வைத்தது.

இரண்டாவதாக கவிஞர் யுகபாரதிய எழுதி ஸ்ரேயா கோஷல், சித் ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து பாடிய 'சாரல் காற்றே' என்ற பாடலும், மூன்றாவதாக கவிஞர் மணி அமுதவன் எழுதிய அந்தோணிதாசன், வந்தனா சீனிவாசன், நாகேஷ் அஸிஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ள 'மருதாணி' என்ற பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கிடையில் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞரான கே.பி.குமரன் என்பவர் ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் இசையமைப்பாளர் இமான் இசையில் அறிமுகமாகி உள்ளார். இந்தத் தகவலை இசையமைப்பாளர் இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்தார்.

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டம், கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கலைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த நாதஸ்வர சகோதரர்கள் பஞ்சமூர்த்தி, கானமூர்த்தி. இதில் பஞ்சமூர்த்தியின் இளைய மகன்தான் கே.பி. குமரன். குமரன் தனது தந்தையின் மூலம் சிறுவயதிலிருந்தே கர்நாடக சங்கீதத்தையும், நாதஸ்வரத்தையும் கற்றுக் கொண்டதுடன் தன் தந்தையோடு சேர்ந்து கோயில்கள் மட்டுமின்றி, ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற கச்சேரிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். பதின்வயதுகளில் ஸ்வரங்களைப் புதிய பாணியில் பாடக்கூடிய திறனும் பெற்றதால் இலங்கையில் முன்னணி இசைக் கலைஞராகவும் வளர ஆரம்பித்தார். இலங்கையில் இவரது நாத சங்கம நிகழ்வுகள் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்துள்ளன.

இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் உடன் கே.பி. குமரன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணை தூதரகத்தில் தூதுவர் ராகேஷ் நட்ராஜை கே.பி. குமரன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது இந்திய- இலங்கைக்கான கலாச்சார பிணைப்பை இசையின் மூலம் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் கேட்டுக் கொண்டார்.

அண்ணாத்த படத்தில் கே.பி.குமரன் நாதஸ்வரக் கலைஞராக பணியாற்றி இருப்பதால் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் இலங்கையிலும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x