Published : 15 Oct 2021 05:00 PM
Last Updated : 15 Oct 2021 05:00 PM

ஆட்டுத்தொட்டி உலகில் மான்கள் வாழும் தோப்பு: 'உடன்பிறப்பே' குறித்து கதாசிரியர் ஆர்.செல்வராஜ் புகழாரம்

சென்னை

'உடன்பிறப்பே' படத்தைப் பாராட்டி கதாசிரியர் ஆர்.செல்வராஜ் கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'உடன்பிறப்பே'. இது ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 50-வது படமாகும். அமேசான் ஓடிடி தளத்தில் அக்டோபர் 14-ம் தேதி வெளியாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

ஆனால், இந்தப் படத்துக்குப் பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 'அன்னக்கிளி', 'கிழக்கே போகும் ரயில்', 'இதய கோயில்' உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு கதை எழுதியுள்ள ஆர்.செல்வராஜ், 'உடன்பிறப்பே' படத்தைப் பாராட்டிக் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் ஆர்.செல்வராஜ் கூறியிருப்பதாவது:

" 'உடன்பிறப்பே' படம் பார்த்தேன். 2டி ராஜாவுக்கு நன்றி. நடிகையர் திலகம் ஜோதிகா சூர்யா படத்தில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட மணிமகுடமாகச் சிறப்பிக்கிறார். பசும் வெண்ணெய் உருகி நெய்யாவது போல், பார்ப்பவர் மனதிற்குள் மணம் வீசுகிறார். வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை, கண்ணில் சொல்லி கண்களைக் குளமாக்குகிறார்.

வாராவாரம் ஏராளமான ஆடுகள் வெட்டப்படும் ஆட்டுத்தொட்டி போல் இருந்த சினிமா உலகில், மென்மையான மான்கள் வாழும் ஒரு தோப்பை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சரவணன். கொம்புள்ள மான்களைக் காட்டியிருப்பது அருமை. நண்பர்கள் சசிகுமாரும், சமுத்திரக்கனியும் இயல்பாக நடித்து படத்திற்குப் பெருமை சேர்க்கிறார்கள். பெரிய திரையில் பார்க்க வேண்டிய படம். அனைவருக்கும் வாழ்த்துகள்".

இவ்வாறு ஆர்.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

— P.samuthirakani (@thondankani) October 15, 2021

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x