Published : 12 Oct 2021 11:59 AM
Last Updated : 12 Oct 2021 11:59 AM

ஜூனியர் என்.டி.ஆரின் மக்கள் தொடர்பாளர், தயாரிப்பாளர் மகேஷ் கொனேரு காலமானார்

தெலுங்குத் திரையுலகில் தயாரிப்பாளராகவும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் மக்கள் தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்த மகேஷ் கொனேரு காலமானார்.

திரைப்பட விமர்சகராகவும், சினிமா பத்திரிகையாளராகவும் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் பெயர் பெற்றவர் மகேஷ் கொனேரு. இதன்பின் திரைப்படங்களின் விளம்பர வடிவமைப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 'கான்சே', 'பாகுபலி' உள்ளிட்ட படங்களின் விளம்பர வடிவமைப்பில் இவர் பங்கேற்றுள்ளார்.

இதன் பிறகு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கல்யாண் ராம் இருவருக்கான மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றி வந்தார் மகேஷ். இன்னொரு பக்கம் ஈஸ்ட் கோஸ்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். கல்யாண் ராம் நாயகனாக நடித்த '118' படமே இவரது முதல் தயாரிப்பு. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்த 'மிஸ் இந்தியா', 'போலீஸ் வாரி ஹெச்சரிகா', 'திம்மரசு' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தார். 'மாஸ்டர்' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கி ரிலீஸ் செய்தார்.

சமீபத்தில் இவரது தயாரிப்பில் அல்லரி நரேஷ் நடித்த 'சபகு நமஸ்காரம்' என்கிற திரைப்படம் வெளியானது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை திடீர் மாரடைப்பின் காரணமாக மகேஷ் கொனேரு காலமானார். அவரது மறைவுக்கு நடிகை ராஷி கண்ணா, இயக்குநர்கள் ஹரிஷ் ஷங்கர், நடிகர் பந்த்லா கணேஷ் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

"கனத்த இதயத்தோடு, இன்னும் சுத்தமாக நம்ப முடியாத சூழலில், எனது அன்பார்ந்த நண்பர் மகேஷ் கொனேரு காலமாகிவிட்டார் என்கிற தகவலை உங்களோடு பகிர்கிறேன். அதிக அதிர்ச்சியில் வாயடைத்துப் போயிருக்கிறேன். அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x