Published : 08 Oct 2021 06:40 PM
Last Updated : 08 Oct 2021 06:40 PM
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 65.
கவிஞர், நடிகர், வசனகர்த்தா, ஆன்மிகவாதி எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்ட பிறைசூடன் திருவாரூர் மாவட்டன், நன்னிலம் கிராமத்தில் 1956-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி பிறந்தவர். 1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ’ராசாத்தி ரோசாப் பூவே’ என்னும் பாடலை எழுதியதன் மூலம் தமிழ்த் திரைப்படத் துறையில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார்.
இளையராஜா இசையில் பல்வேறு படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். ‘என்னைப் பெத்த ராசா’ படத்தில் ’சொந்தம் ஒன்றாய்’ என்ற பாடலை எழுதினார். ‘ராஜாதி ராஜா’ படத்தில் புகழ்பெற்ற காதல் பாடலான ‘மீனம்மா மீனம்மா’ பாடலை எழுதினார். ‘பணக்காரன்’ படத்துக்காக ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ என்னும் திருமண வாழ்த்துப் பாடலை எழுதினார்.
நடந்தால் இரண்டடி, சோலப் பசுங்கிளியே, ஆட்டமா தேரோட்டமா, இதயமே இதயமே, காதல் கவிதைகள் படித்திடும் நேரம், என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி, சைலன்ஸ் சைலன்ஸ் காதல் செய்யும் நேரம் இது, வெத்தல போட்ட ஷோக்குல, சந்திரனே சூரியனே, ரசிகா ரசிகா என தமிழ்த் திரைப்படங்களில் 1000க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.
திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி பக்திப் பாடல்களையும் எழுதியுள்ளார். ஆன்மிகத்திலும் ஆழம் கண்ட பிறைசூடன் மஹா பெரியவரின் ஆன்மிக சேவைகளை விளக்கி, ‘மஹா பெரியவா’ எனும் கவிதை நூலை எழுதி, வெளியிட்டார். டப்பிங் படங்களுக்கும் பாடல்கள், வசனம் எழுதியுள்ளார். ஏராளமான பட்டிமன்றம், கவியரங்கங்களுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.
35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் பல முக்கியமான பங்களிப்புகளை வழங்கிய பிறைசூடன் ஆஸ்கர் விருதுக்கு இந்தியப் படங்களைப் பரிந்துரைக்கும் குழுவில் சமீபத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக்கொண்டிருந்த பிறைசூடன் திடீரென்று உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிறைசூடன் மறைவுக்கு தமிழ்த் திரையுலக பிரபலங்கள், பாடலாசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT