Published : 27 Sep 2021 09:14 PM
Last Updated : 27 Sep 2021 09:14 PM
ப்ளூ சட்டை மாறனின் ருத்ர தாண்டவம் தான் ஆன்டி இண்டியன் எனப் பெருமிதம் பொங்க தெரிவித்தார் படத்தின் தயாரிப்பாளர் ஆதம்பாவா.
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (ப்ளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். சினிமா விமர்சகராக இருந்து, இயக்குனராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.
அதே சமயம் இந்தப்படம் சென்சார் சான்றிதழ் வாங்குவதற்கு கூட போராட வேண்டிய சூழ்நிலையும் உருவானது. இறுதியாக நீதிமன்றமே தலையிட்டு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில், தற்போது இந்தப்படத்திற்கு வெறும் மூன்று கரெக்சன்களுடன் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
எதனால் இந்தப் போராட்டம், இதற்கு பின்னால் யாரவது அழுத்தம் கொடுத்தார்களா என்பது குறித்து இயக்குநர் ப்ளூ சட்டை மாறனும் தயாரிப்பாளர் ஆதம் பாவாவும் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பல்வேறு தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.
தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசும்போது, "இந்தப்படத்தை எடுக்கும்போதே பின்னால் பெரிய பிரச்சனைகள் வரும் என தெரிந்தே தான் ஆரம்பித்தோம்.
இதுவரை சென்சார் அமைப்பினர் ஒவ்வொரு படத்திற்கும் ஏதோ ஒரு அடிப்படையில் சான்றிதழ் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் இந்த ஆன்டி இண்டியன் படத்தைப் பார்த்துவிட்டு இதற்கு எப்படி சான்றிதழ் கொடுப்பது என்றே அவர்களுக்குப் புரியவில்லை. மாறன் இயக்கியுள்ள இந்தப்படம், வழக்கமாக அவர்கள் பார்க்கும் படங்களில் இருந்து மாறுபட்டு இருப்பதால் அவர்களுக்கே குழப்பம் ஏற்பட்டுவிட்டது.
ஆனால் சென்னை, பெங்களூர், மும்பை என மூன்று இடங்களிலும் படம் பார்த்த சென்சார் கமிட்டியினர் ஒவ்வொருவரும் படத்தை பற்றி வெவ்வேறு கண்ணோட்டம் கொண்டிருந்தாலும், பார்த்த அனைவருமே இந்தப் படத்தை பாராட்டத் தவறவில்லை. அதுவே எங்கள் படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி.
இந்தப்படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் ஒரு தயாரிப்பாளராக எனக்கு எந்தவித நட்டமோ பாதிப்போ இல்லை. சொல்லப்போனால் லாபம் தான். இப்போதே பல பேர் இந்தப்படத்தை வாங்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள். அந்தவகையில் இந்த ஆன்டி இண்டியன் படம் மாறனின் ருத்ர தாண்டவமாக இருக்கும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT