Published : 25 Sep 2021 05:59 PM
Last Updated : 25 Sep 2021 05:59 PM
எஸ்.பி.பிக்கு விரைவில் மணிமண்டபம் கட்டவுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், 2020-ம் ஆண்டு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 25-ம் தேதி காலமானார். அவருடைய உடல் சென்னைக்கு அருகிலுள்ள தாமரைப்பாக்கம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
இன்று (செப்டம்பர் 25) எஸ்.பி.பியின் நினைவு நாளை ஒட்டி அங்கு பொதுமக்கள் கூடினார்கள். ஆனால், யாருமே உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இது தொடர்பாக மகன் எஸ்.பி.சரண் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
"கரோனா சூழலால் காவல்துறையினர் பொதுமக்களை அனுமதிப்பதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. எஸ்.பி.பி ரசிகர்கள் கூட்டமைப்பு மற்றும் குடும்பத்தினர் மட்டுமே இங்கு வந்துள்ளோம். கடந்த ஓராண்டாக அவர் இல்லாவிட்டாலும், செய்யவேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. தெலுங்கில் 22 ஆண்டுகளாக அவர் நடத்திக் கொண்டிருந்த நிகழ்ச்சியை இப்போது நான் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறேன். நிறைய நிகழ்ச்சிகள், கச்சேரிகள் எனச் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.
அப்பாவுக்கு என்ன பண்ணப் போகிறோம் என்றால், அவருடைய பெயரைக் கெடுக்காமல் இருக்க வேண்டும். இங்கு ஒரு மணிமண்டபம் கட்ட திட்டமிட்டு வருகிறோம். இன்னும் ஓவியங்கள், திட்டமிடல்கள் எனப் போய்க் கொண்டிருக்கிறது. அதெல்லாம் ஓராண்டில் முடியக்கூடிய வேலையில்லை. ஏனென்றால் ஒரு மியூசியம், திரையரங்கம் உள்ளிட்டவற்றைக் கட்ட திட்டமிட்டுள்ளேன்.
அந்த வேலைகள் எல்லாம் எப்போது முடியும் என்று சொல்ல முடியவில்லை. கண்டிப்பாகக் கூடிய விரைவில் வேலைகளைத் தொடங்கவுள்ளோம். இதுவரை தமிழக அரசிடமிருந்து எந்தவொரு உதவியும் கேட்கவில்லை. அனைத்து வேலைகளையும் ஓவியங்களாக முடித்துப் போய் தமிழக அரசிடம் காட்டவுள்ளேன். எஸ்.பி.பி. தொண்டு நிறுவனம் மூலமாகவே ஒரு பகுதியைக் கட்டவுள்ளோம். மீதமுள்ளதை தமிழக அரசிடம் வேண்டுகோள் வைக்கலாம் என்ற எண்ணமும் உள்ளது".
இவ்வாறு எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT